ஆண்களுக்கான தெற்காசிய விளையாட்டு விழாவில் கராத்தேயில் பதக்கம் வென்ற தமிழ் வீரன்!

13வது தெற்காசிய விளையாட்டு விழா போட்டிகளில் ஆண்களுக்கான தனிநபர் கராத்தே போட்டியில் கிழக்கு மாகாணத்தின் கல்முனை சேனைக்குடிருப்பைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.

நோபாள தலைநகர் காட்மண்டுவில் 13வது தெற்காசிய விளையாட்டு விழா நேற்று (2) ஆரம்பித்தது.

நேற்று காலையில் நடைபெற்ற கராத்தே போட்டியில் போட்டியில் நேபாளத்தைச் சேர்ந்த கஜி ஸ்ரேஸ்தா தங்கப் பதக்கத்தையும், பாகிஸ்தானைச் சேர்ந்த நியாமதுல்லாஹ் வெள்ளிப் பதக்கத்தையும், இலங்கையின் சௌந்தரராஜா பாலுராஜ் வெண்கல பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

இதன்மூலம் தெற்காசிய விளையாட்டு விழாவில் முதல் பதக்கத்தை வென்ற தமிழ் பேசுகின்ற வீரராக சௌந்தரராஜா பாலுராஜ் இடம்பிடித்தார்.

கராத்தே போட்டிப் பிரிவுகளில் இலங்கை சார்பில் சென்றுள்ள 26 வீரர்களுள் பாலுராஜ் மட்டுமே தமிழ் பேசுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் 2017ம் ஆண்டு முதல் இலங்கை தேசிய கராத்தே அணியில் இடம்பிடித்த ஒரேயொரு தமிழ் பேசும் வீரர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.