முன்னாள் ஜனாதிபதியை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து விரட்ட நடவடிக்கை..!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து விரட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

2015 ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரங்களின்போது தான் ஜனாதிபதியானால் ஜனாதிபதி மாளிகையில் குடியிருக்க மாட்டேன் என மைத்திரிபால சிறிசேன மக்களுக்கு உறுதி வழங்கியிருந்தார்.

அதன் பிரகாரம் ஜனாதிபதி மாளிகையில் குடியேறாத அவர், கொழும்பிலுள்ள ஜெய்ட வீதியில் வசித்துவந்தார். அவ்விடத்திலுள்ள மூன்று வீடுகளை இணைத்து 800 கோடி அரச செலவில் நவீனமயப்படுத்தியே சிறிசேன அவ்வீட்டில் வசித்துவந்தார்.

இலங்கையில் ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம், காரியாலயம், அதற்கான ஊழியர்கள் குழு, பாதுகாப்பு மற்றும் இதர செலவுகள் என பல வரப்பிரசாதங்கள் உண்டு.

இந்நிலையில் தான் ஓய்வு பெற்றதன் பின்னர் மேற்படி இல்லத்தையே தனது வாசஸ்தலமாக பயன்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் கடந்த அரசாங்கத்தில் இறுதியாக இடம்பெற்ற அமைச்சரவை ஒன்றுகூடலின்போது, மேற்படி இல்லத்தினை மைத்திரிபால சிறிசேன தனது ஓய்வுக்காலத்தில் உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்துவதற்கான அனுமதியை முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர வாய்மூலமாக கோரியுள்ளார்.

அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளபோதும் புதிய அரசாங்கம் அவரை அவ்வீட்டிலிருந்து வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.