வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இவர்கள் நால்வரின் நிலை என்ன.?

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நண்பர் வியாழேந்திரனின் வெற்றி வாய்ப்பு ஒரு பகற்கனவாகவே அமையும் என்பது கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்த விதத்தில் இருந்து தெளிவாகின்றது.

என்னதான் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான பிரச்சாரங்களை வியழேந்திரன் மேற் கொண்டாலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களிப்பார்கள் என்ற உறுதியான வரலாற்று சிந்தனையிலே இன்னும் மட்டக்கப்பளப்பு வாழ் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

புளோட் அமைப்பினை வியாழேந்திரன் அடிப்படையாக கொண்டிருந்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள் வழங்கிய அங்கீகாரத்தினாலேயே கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர் வெற்றியடைய காரணமாக அமைந்திருந்தது.

பல்லாயிரம் மாணவர்களுக்கு ஆசானாக இருந்து தமிழ் பாடம் கற்றுக்கொடுத்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கீகாரத்துடன் வந்தால்தான் தன்னிடம் தமிழ் கற்ற மாணவர் சமூதாயம் வியாழேந்திரனுடைய வார்த்தைகளை அங்கீகரிக்கும் என்ற தீர்க்கமான மட்டக்களப்பு மக்களின் அரசியல் கோட்பாட்டினை கடந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவு அவருக்கு உணர்த்தி இருக்கும் என்பதே உண்மை.

அந்த வகையில் அமைதியாக இருந்து அரசியலில் சாதிக்க வேண்டிய வியாழேந்திரன் அவசரப்பட்டு விட்டாரோ என்பதும், அவருடைய மட்டக்களப்பு சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு விடை கிடைக்க வேண்டும் என ஊடகங்களுக்கு முன்னால் உணர்ச்சி பூர்வமாக தெரிவிக்கின்ற கருத்துக்களையும்,

மக்களுக்கான ஆர்ப்பாட்டங்களையும் மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்கள் அங்கீகரிக்க வில்லை என்பதே இன்னொமொரு முக்கியமான செய்தியாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் வாக்களித்த விதம் உணர்த்தியுள்ளது.

அந்த வகையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அவர் களமிறங்குவாரானால் அவருடைய கனவு பகற்கனவினை விடவும் மோசமாகத்தான் இருக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பு.

மறு புறத்திலே முஸ்லிம்கள் சார்பில் ஏறாவூரில் அலிசாஹிர் மற்றும் கல்குடாவில் அமீர் அலி ஆகியோர்களுக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே நான் உணர்கின்றேன்.

அதிலும் இருவரும் ஐக்கிய தேசிய கட்சியுடன் அல்லது புதிதாக அமைக்கப்படலாம் என கூறப்படும் சஜித் கூட்டணியுடன் இணைந்து கேட்பார்களாயின் வழமையைப்போன்று முஸ்லிம்களுக்கான இரண்டு பாராளுமன்ற பிரதி நிதித்துவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

அதிலும் அமீர் அலிக்கு முஸ்லிம்களுடைய வாக்குகளுக்கு மேலதீகமாக தமிழ் மக்களின் வாக்குகள் கணிசமான அளவு கிடைக்க கூடிய வாய்ப்புக்கள் இருப்பதினால் ஒரே கூட்டணியில் இருவரும் களமிறங்கினாலும் அமீர் அலி அதிகூடிய வாக்குகளில் பாராளுமன்றம் செல்வார் என்பது எனது கணிப்பு.

அல்லது அமீர் தனது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக களமிறங்குமிடத்தில், தனக்கு நிலையாக கல்குடாவில் இருக்கும் 12000க்கும் அதிகமான வாக்குகளோடு தமிழ் மக்களின் வாக்குகள்,

ஏனைய பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களுடைய வாக்குகளால் இலகுவாக வெற்றியடைவார் என்பது எனது கருத்து மட்டுமல்லாமல் மாவட்டத்தில் உள்ள சிரேஸ்ட்ட மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளை சார்ந்த அரசியல் விமர்சகர்களின் அலசலாகவும் காணப்படுகின்றது.

இன்னொருபக்கத்திலே கடந்த பாராளுமன்ற தேர்தலில் சொற்பவாக்குகளால் தோற்கடிக்கப்பட்ட காத்தன்குடியை சேர்ந்த ஹிஸ்புல்லா வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும் தனது கோட்டையை இழந்து தோல்விய தழுவும் நிலமையே காணப்படுகின்றது.

நாடு பூராகவும் ஜனாதிபதி தேர்தலில் 36 ஆயிரம் வாக்குகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்ட ஹிஸ்புல்லாவினால் எவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தனக்கு தேவையான பாராளுமன்ற தேர்தலில் வெற்றியடைவதற்கான போதுமான வாக்குகளை பெற்றுக்கொள்வார் என்பதுதான் இங்கிருகின்ற மிகப்பெரிய கேள்வி.

அதுமட்டுமல்லாமல் வழமைபோன்று தனது ஊரிலே தனக்கு எதிரான அரசியலை மேற்கொள்ளும் ஷிப்லி பாருக், அப்துர் ரஹ்மான், புதிதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துள்ள சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் ஜெளபர்கான் போன்றவர்களுக்கு மத்தில் அவருடைய அரசியல் வரலாறு நெடுகிலும் தனக்கென மூவாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை அளித்துவரும் மெளலவி அப்துர் ரவூபினால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவும் ஹிஸ்புல்லாவின் எதிரே வருகின்ற பாராளுமன்ற கனவினை தவிடுபொடியாக்கி விடக்கூடிய எதிர்வு கூறல்களை மேலும் பலப்படுத்தும் விடயமாக அமைந்துள்ளது.

இருந்தும் தனது சொந்த ஊரான காத்தான்குடி மக்கள் தேர்தல் காலத்தில் தனக்கு சாதகமான முடிவினை தருவார்கள் என்பதற்கு அப்பால் தேர்தலுக்கு முதல் இரவு காத்தான்குடி சம்மேளத்தின் வேண்டுகோளின் படி ஒட்டுமொத்த ஊர் மக்களும் சமூகபற்றுடன் தனக்கு வாக்களிப்பதற்கான முடிவினை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையிலும் ஹிஸ்புல்லாவின் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை நோக்கிய வியூகங்கள் அமையலாம். அதற்கு கடந்த கால வரலாறுகளும் சான்றுகளாகவே உள்ளன என்பதே உண்மை.

ஆகவே இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்துகான ஐந்து பாராளுமன்ற பிரதி நிதித்துவங்களில் மூன்றினை வழமை போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பும் இரண்டினை முஸ்லிம்கள் சார்பாக அமீர் அலியும் அலி ஷாஹிரும் தட்டிசெல்வதற்கான வாய்ப்புக்களுக்கு மத்தியில் அமீர் அலியின் வெற்றி வாய்ப்பும் அதற்கான எதிர்வு கூறல்களும் அதிகமாகவே இருக்கின்றன.

அல்லது முஸ்லிம்களுடைய வாக்குகள் வழமை போன்று தேவையற்ற அரசியல் வாதபிரதி வாதங்குகளுக்கு மத்தியில் சிதறடிக்கப்படுமாயின் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நான்கு ஆசனமும் 2004ம் ஆண்டினை போன்று சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பசீர் சேகுதாவூத்தினை வீழ்த்தி வெற்றியடைந்தனை போன்று அமீர் அலி மட்டுமே பாராளுமன்ற கதிரையில் உட்கார்வார் என்பதே நடக்கப்போகும் தேர்தல் முடிவாக அமையலாம்.