குளவி கொட்டியதில் மூவர் உயிரிழப்பு

கோபமடைந்த குளவிக் கூட்டம் கொட்டியதில் இந்தோனீசியாவில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அண்மைய ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான இத்தகைய தாக்குதல்கள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மூவர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைப்பைச் சேர்ந்த அதிகாரி குறிப்பிட்டார்.

மேற்கு ஜாவாவில் கடந்த புதன்கிழமை (நவம்பர் 20) குளவிக் கூட்டைக் கலைக்கும் செயலில் நான்கு மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளவிகள் தாக்கியதில் 11 வயது மாணவர் உயிரிழந்தார். அந்தக் கூட்டில் இருந்தவை மிகவும் கோபத்துடன் தாக்கும் குணமுடையவை என்றும் அவற்றின் கொடுக்குகள் உயிரைப் பறிக்கும் அளவுக்கு மோசமான ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியவை என்றும் கூறப்பட்டது.

குளவிகள் அதிகம் காணப்படும் கிளாட்டன் நகரில் சென்ற மாதம் இரண்டு முதியோர் குளவிகள் தாக்கியதில் உயிரிழந்தனர். மத்திய ஜாவா பகுதியில் உள்ள அந்த கிராமத்தில் பலர் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்தப் பகுதியில் கடந்த ஆண்டு ஏழு பேர் குளவிகள் கொட்டியதில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குளவிகள் கொட்டியதால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்குத் தயார் நிலையில் அந்தப் பகுதியின் பல மருத்துவமனைகள் இருப்பதாக கிளாட்டன் நகரின் சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் காயோ விடோடோ கூறினார்.

குளவிகள் அதிக அளவில் காணப்படும் இடங்களில் குளவிக்கூடுகளை அழிக்கும் பணியில் தொண்டூழியர்களும் ஈடுபடுகின்றனர்.