ஆட்டத்தின் நடுவே கோலி செய்த நெகிழ்ச்சியான செயல்!

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 106 ரன்களில் சுருண்ட நிலையில் அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இரண்டு வீரர்கள் ஆட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் முகமது ஷமியின் பவுன்சரில் அடிப்பட விரைந்து வந்த வங்கதேச மருத்துவர் அவரை பரிசோதித்த பிறகு அவர் ஆட்டத்தை தொடர்ந்தார். ஆனால் அடுத்த இரண்டு ஓவர்களில் அவர் விளையாட முடியாமல் வெளியேறி விட்டார்.

இறுதியில் விளையாட வந்த நயீம் ஹசன் மீண்டும் முகமது ஷமியின் பந்துவீச்சில் ஹெல்மெட்டில் அடிவாங்க நிலைகுலைந்து போன அவரை பரிசோதிக்க வங்கதேச அணியின் மருத்துவர் அங்கு இல்லை. அவர் லிட்டன் தாஸை  கவனித்து கொண்டிருந்தார். இதனை பார்த்த கேப்டன் கோலி உடனடியாக இந்திய அணியின் மருத்துவரை அழைக்க, நிதின் படேல் வேகமாக விரைந்தார்.

விரைந்து வந்த நிதின் படேல் நயீம் ஹாசனை பரிசோதிக்க அவர் நிதானத்தில் இருப்பதை உறுதி செய்து சிறு புன்னகையுடன் தனது கைவிரலை உயர்த்தி காட்ட மைதானம் இயல்பு நிலைக்கு வந்தது. கோலியின் அந்த செயல் இணையத்தில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

ஐசிசி புதிய விதிமுறைப்படி லிட்டன் தாஸ் க்கு பதில் மெஹைடி ஹசன் களமிறங்கி பேட்டிங் செய்தார். பந்துவீச்சாளரான அவர் இந்த ஆட்டத்தில் பந்துவீச முடியாது. அதன்பின் காயமடைந்த நயீம் ஹாசனுக்கு பதில் டைஜூல் இஸ்லாம் அணியில் இணைந்து பந்துவீசி வருகிறார்.