ஐ.தே.க.தலைமையை சஜித்திடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குமாறு வலியுறுத்தி தனிநபர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவுக்கு முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் அவர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

‘சஜித் பிரேமதாசவிடம் தலைமைத்துவத்தை ஒப்படையுங்கள்’ என வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் சஜித் பிரேமதாசவுக்கு தலைமை பதவி வழங்கும் வரை, தான் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளளார்.

இதேவேளை சஜித் பிரேமதாசவை எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கையெழுத்திட்ட கடிதமொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்.பி.பெரேரா சபாநாயகரிடம் கையளித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்குமாறு கோரி, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசத்திடமிருந்தும் ஒரு கடிதம் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம், ஐ.தே.க.க்குள் மேலும் பிளவை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.