அரசு அலுவலகத்திற்குள் ஹெல்மெட் அணிந்துகொண்டு பணிபுரியம் ஊழியர்கள்; என்ன காரணம் தெரியுமா?

பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் ஊழியர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு பணிபுரிவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

அம்மாநிலத்தின் பண்டா மாவட்டத்தில் உள்ள மின்சாரத்துறை அலுவலகத்தில் கான்கிரீட் மேற்கூரை பாழடைந்துள்ளதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

அறையின் நடுவில் உள்ள தூண் மட்டுமே மேற்கூரையை தாங்கி இருப்பதாக கூறும் ஊழியர்கள், ஏதேனும் விபத்து நடந்தால் பாதுகாத்துக் கொள்வதற்காக தாங்கள் ஹெல்மெட் அணிந்து பணிபுரிவதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உயரதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது மட்டுமின்றி மழைக்காலத்தில் கட்டிடம் ஒழுகுவதால் குடைகளுடன் பணிபுரிவதாகவும் போதிய அலமாரிகள் இல்லாததால் முக்கியமான ஆவணங்கள் அட்டை பெட்டிகளில் கிடப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதற்க்கு பொறுப்பான அரச அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குறித்த அலுவலகத்தை புனரமைப்பு செய்ய வேண்டுமென்பதே அனைவரதும் கோரிக்கையாக உள்ளது.