நான்கு கொலைகளுடன் தொடர்புடையது என தேடப்பட்டு வந்த பிரபல பாதாள உலககுழு உறுப்பினர் புர்கா அணிந்து தலைமறைவாக வாழ்ந்த நிலையில் கைது!

நான்கு கொலைகளுடன் தொடர்புடைய தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் புர்கா அணிந்து நடமாடிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். முஸ்லிம் பெண்ணாக மாறுவேடமிட்டு புர்கா அணிந்து திரிந்த இவரை, நுகேகொட பொலிஸ் பிரிவின் சட்ட அமுலாக்கல் பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.

ருவான் குமார (ஆமி குமார) என்ற 29 வயதானவரே கைதாகியுள்ளார்.

சூரியவெவவை சேர்ந்த இவர் தென், மேல் மாகாணங்களில் நடந்த பல கொலைகள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நான்கு கொலைகளில் அவர் தொடர்புபட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அவர் நடத்திய சில கொலைகளின் போதும், புர்கா அணிந்து சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

கோஹூவல பகுதியில் ரணவகக் சுனில் ருவான் பெரேரா என்ற மில்லியனர் தொழிலதிபர் இந்த ஆண்டு ஜூலை 28 ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை ஈடுபட்ட பொலிஸ் குழுவிடமே இவர் சிக்கினார். உதகமுல்லவில் வைத்து கைதாகினார்.

தெற்கில் மிகவும் சக்திவாய்ந்த பாதாள உலக கும்பல்கள்
தலைவராக கூறப்படும் கொஸ்கொட சுஜியின் கீழ் இவர் இயங்கினார் என்பது தெரிய வந்துள்ளது. சுஜி தற்போது டுபாயில் வாழ்ந்து வருகிறார். கொல்லப்பட வேண்டியவர்கள், தாக்கப்பட வேண்டியவர்களின் விபரத்தையும், அதற்கு தேவையான உபகரணங்களையும் இந்த நபருக்கு சுஜி அனுப்பி வைப்பார்.

சந்தேகநபர் இராணுவத்தின் சிறப்பு பிரிவில் முன்னர் பணியாற்றியுள்ளார்.