சமையல் எரிவாயு தட்டுப்பாடு இரு தினங்களில் தீர்வு! லிற்ரோ எரிவாயு நிறுவனம்.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரு தினங்களில் முற்றாக நீங்கிவிடும் என லிற்ரோ எரிவாயு நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாளை 3,650 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பலொன்று கொழும்பு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டு நிலைவரம் தொடர்பாக இன்று தமிழ் தேசிய பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான முழுமையான நடவடிக்கைகளை எமது நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில் இரு நாட்களுக்குள் தட்டுப்பாட்டை முழுமையாக நீக்கக்கூடியதாக இருக்கும். இந்த நடவடிக்கைகளை நாம் கடந்த 3ஆம் திகதியிலிருந்து ஆரம்பித்திருந்தோம். இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி 80 ஆயிரம் மெட்ரிக் தொன்னிற்கும் அதிகமான எரிவாயுவை கொள்வனவு செய்திருந்தோம்.

அதேபோல் கடந்த 4ஆம் திகதி 110 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிவாயுவையும், 5 ஆம் திகதி 80 ஆயிரம் மெட்ரிக் தொன்னிற்கும் அதிகமான எரிவாயுவையும் கொள்வனவு செய்திருந்தோம்.

அத்துடன் நேற்று சுமார் 80 ஆயிரம் மெட்ரிக் தொன்னிற்கும் அதிக நிறையுடைய எரிவாயுவை வெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்திருந்தோம்.

அதேவேளை நாளையும் , நாளை மறுதினமும் எரிவாயுவை வெளிநாட்டிலிருந்து கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

சாதாரணமாக நாளொன்றிற்கு 60 ஆயிரம் தொடக்கம் 65 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிவாயுவினையே விநியோகித்து வந்தோம்.

ஆயினும்,எரிபொருள் தட்டுப்பாட்டின் நிமித்தம், ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவினை விநியோகிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கான கேள்வியும் அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்த மட்டத்தில் காணப்பட்ட போதிலும், இலங்கையில் 250 ரூபாயால் எரிபொருளின் விலை குறைத்தமையை இந்த தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணமாகும்.

அந்த வகையில் , எரிவாயுவின் விலை குறைந்தமையினால், மக்கள் அதனை அதிகமாக கொள்வனவு செய்வதில் நாட்டம் செலுத்தினர்” என்று தெரிவித்துள்ளார்.