விண்வெளியில் நடந்து சாதனை படைத்த பெண்கள்!

அமெரிக்க விண்வெளி வீராங்கனைகளான கிறிஸ்டினா கோச், ஜெஸிகா மீர் ஆகிய இருவரும் விண்வெளியில் நடந்து சாதனை படைத்துள்ளனர்.

விண்வெளியில் ஆய்வில் ஈடுபடும் வீரர், வீராங்கனைகள் பழுது பார்ப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். அப்போது வீராங்கனைகள் ஆண்களின் துணையில்லாமல் இந்த பணிகளை மேற்கொண்டதில்லை.

அதாவது விண்வெளியில் பெண்கள் மட்டுமே தனியே நடந்ததில்லை. இந்நிலையில், அமெரிக்க விண்வெளி வீராங்கனைகளான கிறிஸ்டினா கோச், ஜெஸிகா மீர் ஆகிய இருவரும் தனியாக விண்வெளியில் நடக்க உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது.

நாசா விண்வெளி ஆய்வுகளில் ஆணாதிக்கம் நிலவுவதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில் தான் இந்த அறிவிப்பு வெளியானது.

குறித்த விண்வெளி வீராங்கனைகள் இருவரையும், சர்வதேச விண்வெளி ஆய்வு மைய பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுத்த நாசா திட்டமிட்டது.

ஆனால், இதில் ஒரு சிக்கல் இருந்தது. நாசாவிடம் விண்வெளிப் பயணங்களுக்கு பயன்படும் ஆண்களுக்கான பெரிய அளவு உடைகள் இருந்தாலும், பெண்களுக்கான நடுத்தர அளவு உடை ஒன்று மட்டுமே இருந்தது.

இதனால் இரு பெண்களை ஒரே நேரத்தில் அனுப்புவது இயலாமல் போனது. அதனைத் தொடர்ந்து, மேலும் கூடுதலாக ஒரு நடுத்தர அளவு உடை உருவாக்கப்பட்டு தற்போது கிறிஸ்டினா கோச், ஜெஸிகா மீர் இருவரும் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி ஆய்வகத்தின் பராமரிப்பு பணியை மேற்கொண்டனர். இதன்மூலம், விண்வெளி ஆய்வு வரலாற்றில் அவர்கள் புதிய சாதனையைப் படைத்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.