பூட்டிக் கிடந்த குடியிருப்பு… மாணவனின் மர்மச்சாவு..!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து 10 ஆண்டுகளுக்கு முன்னர் மர்மமாக இறந்த சிறுவனின் உடலை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் அருகே பரதனூர் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவரின் மகன் 13 வயது ஆதர்ஷ்.

அந்த பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் 7ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2009 ஏப்ரல் 5 ஆம் திகதி பால் வாங்குவதற்காக சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயன் பாங்கோடு பொலிசாரிடம் புகார் அளித்தார். பொலிசார் வழக்குப்பதிவு செய்து ஆதர்ஷை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மறுநாள் காலை அந்த பகுதியில் வயலை ஒட்டிய ஒரு குளத்தில் ஆதர்ஷ் பிணமாக கிடந்தார்.

இந்த தகவல் அறிந்ததும் பொலிசார் சம்பவயிடத்திற்கு சென்று மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனையில் ஆதர்ஷின் தலையின் பின்பகுதியில் அடிபட்டதால் இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஆதர்ஷ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்யைில் நுரையீரலுக்குள் தண்ணீர் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது ஆதர்ஷ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை அதிகரித்தது. இதையடுத்து பொலிசார் குளத்தில் பரிசோதித்தபோது மண்வெட்டியின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டது.

குளத்தின் அருகே மாணவனின் உடைகளும் காணப்பட்டன. அந்த சமயத்தில் நல்ல மழை பெய்திருந்தது.

ஆனால் உடைகள் நனையாமல் காணப்பட்டன. ஆகவே யாராவது சிறுவனை அடித்து கொலை செய்து குளத்தில் உடலை வீசி சென்று இருக்கலாம் என்று உறவினர்கள், பொது மக்கள் கருதினர்.

மட்டுமின்றி ஆதர்ஷின் மரணம் குறித்து பொலிசார் சரியான முறையில் விசாரிக்கவில்லை என்று கூறி அந்த பகுதியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இதையடுத்து மாணவன் மர்ம மரணம் குறித்து மீண்டும் விசாரிக்க குற்றப்பிரிவு பொலிசார் முடிவு செய்தனர். ஆதர்ஷ் புதைக்கப்பட்ட இடத்தில் உடல் பாகங்களை தோண்டி எடுத்து மீண்டும் பரிசோதிக்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் ஆதர்ஷ் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

பின்னர் உடல் பகுதிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆதர்ஷ் தன்பால் உறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள பூட்டிய குடியிருப்பு ஒன்றில் ஆட்கள் வந்து சென்றதாகவும் பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் சிலர் குறித்த தகவலையும் பொதுமக்கள் பொலிசாருக்கு அளித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.