எவரெஸ்டின் உயரத்தை அளக்க நேபாளமும் சீனாவும் முடிவு.

உலகின் உயரமான சிகரமாக இமயமலையில் உள்ள எவெரெஸ்ட் சிகரம் கருதப்படுகிறது. கடல் மட்டத்துக்கு மேல் 8,848 மீட்டர்கள் (29,028 அடி) உயரம் கொண்டது. த்ரில் அனுபவங்களை விரும்பும் மலையேற்ற வீரர்களின் கனவாக எவரெஸ்ட் இருக்கிறது. ஒரு முறையாவது எவரெஸ்ட்டில் ஏறிவிட வேண்டுமென்பதே சாகச விரும்பிகளின் கனவாக உள்ளது. இந்நிலையில் எவரெஸ்டின் உயரத்தை மீண்டும் அளப்பது என நேபாளமும் சீனாவும் கூட்டாக முடிவு செய்துள்ளன.

இந்திய பயணத்தை முடித்துக் கொண்ட சீன அதிபர் ஷி ஜின்பிங் நேபாளம் சென்று அந்நாட்டு தலைவரை சந்தித்து பேசினார். இந்த சந்திக்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் இரு நாடுகளும் கூட்டாக செயல்படுவது என்றும், எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அறிவியல் ரீதியாக அளவீடு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1954-ஆம் ஆண்டு இந்தியா மேற்கொண்ட கணக்கீட்டின்படி, எவரெஸ்ட் சிகரம் 8,848 மீட்டர் உயரம் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 2015-ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி நிலைகுலைந்ததாக செய்தி வெளியானது.

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க 2017-ம் ஆண்டு நேபாள அரசு அந்நாட்டு சர்வே துறை சார்பில் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு அடுத்த ஆண்டு இறுதிக்குள் எவரெஸ்ட் சிகரம் குறித்து அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது