ஊழல் மோசடி குறித்த விசாரணைக்குழுவில் சாட்சியமளிக்க முன்னிலையாகுமாறு சுங்கப்பணிப்பாளர்!

அரச துறைகளில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சுங்கப் பணிப்பாளர் நாயகம் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (16) அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும்.

மணல் ஏற்றுமதி என்ற போர்வையில் தங்கத்துடன் கலந்த மணல் நாட்டிலிருந்து கடத்தப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக அவர் சாட்சியளிக்க அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் சார்ள்ஸ் இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலமளித்தார்.

2015 மற்றும் 2018 க்கு இடையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்கத்துடன் கலந்த மணல் கடத்தப்பட்டதாக குளியாபிட்டியை சேர்ந்த ஒருவர் முறையிட்டிருந்தார்.

2015 ஜனவரி 15 முதல் 2018 டிசம்பர் 31 வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.