முக்கிய விழாவான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடுவது ஏன்?

நவராத்திரி பண்டிகையின் முக்கிய விழாவான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகளை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் 8ஆம் தேதி விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது.

கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்திற்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்திற்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

கல்வியும், நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றை கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம்.

நவராத்திரி பண்டிகை நாளில் 9 நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள்.

ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகள் போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள்.

இந்த நாளே ஆயுத பூஜை என்று அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது.

ஆயுத பூஜை என்றால் என்ன?

நவராத்திரி கொண்டாட்டத்தின் இறுதி நாளான 9வது நாள் வழிபடுவது தான் ஆயுத பூஜை.

துர்க்கை அம்மனுக்கும், மகிஷாசுரனுக்கும் இடையே 8 நாட்கள் சண்டை நடைபெறுகிறது. 8 நாட்கள் கழித்து 9வது நாள் மகிஷாசுரனை வதம் செய்கிறாள் துர்க்கை. இந்த நாளையே துர்க்கா பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் அழைக்கின்றனர். 9 நாட்கள் சண்டை, மகிஷாசுரன் வதத்துடன் வெற்றிப்பெறுவதால் 10வது நாளை விஜயதசமி என்றும் கொண்டாடுகின்றோம்.