டிரெண்டிங் ஆனது பியூஸ் கோயலின் உளறல் பேச்சு

நாட்டின் பொருளாதார நிலை குறித்து விஞ்ஞானி நியூட்டனுக்கு பதிலாக ஐன்ஸ்டீனை உதாரணமாக கூறிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயலின் பேட்டி சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.

அகில இந்திய அளவிலான வர்த்தக வாரியத்தின் உயர்மட்டக்கூட்டம் டில்லியில் மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நடந்தது. இதில் இணை அமைச்சர்கள் ஹர்தீப்சிங் பூரி, சோமபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் நாட்டின் பொருளாதார மந்த நிலை குறித்து பியூஸ் கோயல் அளித்த பேட்டி, நாடு 5 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார நிலையை அடைய வேண்டுமானால், 12 சதவீத வளர்ச்சியுடன் செல்ல வேண்டும்.

 

ஆனால் நாம் தற்போது, 6-7 சதவீத வளர்ச்சி தான் கொண்டுள்ளோம். பொருளாதாரத்தில் கணக்கீடுகளைக் கொண்டுவராதீர்கள்… ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க அவருக்கு கணக்கு உதவவில்லை. எனவே டிவி சேனல்களில் வரும் தகவல்கள் மூலம் பொருளாதாரத்தை கணக்கில் கொள்ளாதீர்கள் என்றார்.

இவ்வாறு பியூஸ் கோயல் கூறியது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது, ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தார் என்பதற்கு பதிலாக ஐன்ஸ்டீன் என கூறியது, சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.முன்னதாக பொருளாதார மந்த நிலை குறித்து சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார்.

அப்போது ஓலா, உபர் போன்றவைகளை அதிகம் பயன்படுத்துவதால்தான் மோட்டார் வாகனத் துறை கடும் பின்னடைவை சந்தித்தது என கூறினார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. சமூக வலைதளங்கள் அனைத்திலும் நிர்மலா சீதாராமன் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தற்போது மற்றொரு மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் அளித்துள்ள பேட்டி டிரெண்டிங்காகி வருகிறது.

இது குறித்து காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் கூறியது, ஆமாம் ஐன்ஸ்டீனுக்கு புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடிக்க கணக்கு உதவவில்லை. ஏனெனில் அவருக்கு முன்னரே நியூட்டன் அதை கண்டுபிடித்துவிட்டார் என கிண்டலடித்துள்ளார். இதே போன்று மீம்ஸ்களும் பியூஷ் கோயலின் கருத்தை முன்வைத்து விமர்சிக்கின்றனர்.