மர்ம நோயால் 5 பேர் உயிரிழப்பு..!

இன்றுள்ள நிலையில் இளைஞர்களில் இருந்து பெரியவர்கள் வரை என பெரும்பாலானோர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். புகையினால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல் நல பாதிப்புகள் குறித்து பல விழிப்புணர்வுகளை கூறினாலும் புகை பழக்கத்தை கைவிட மறுக்கின்றனர்.

இந்த புகையிலைக்கு அடுத்த பரிணாம வளர்ச்சியாக வெளிவந்து உடல் நலத்திற்கு அதிகளவு கேடு விளைவிக்கும் இ-சிகிரெட் ஆகும். இந்த இ-சிகிரெட் பழக்கமானது அமெரிக்க இளைஞர்களிடம் அதிகளவில் வழக்கத்தில் உள்ளது. இதனை அங்குள்ள இளைஞர்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்., இ-சிகிரெட்டை பயன்படுத்திய இளைஞர்களில் பெரும்பாலானோர் மூச்சுத்திணறல், மயக்கம் மற்றும் இருமல், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனையால் மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதியாகி வருகின்றனர். இந்த சமயத்தில், அமெரிக்காவில் உள்ள இல்லியாய்ஸ் மாகாணத்தில் வசித்து வந்த இளைஞர் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதியாகியுள்ளார்.

இவரது உடல் நிலை மாற்றம் குறித்து., இளைஞரிடம் மருத்துவர்கள் விசாரித்த போது அவர் இ-சிகிரெட் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து இவருக்கு தீவிர சிகிச்சை மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தியை தற்போது அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையமானது அறிவித்துள்ளது.

இதுமட்டுமல்லாது அமெரிக்காவில் உள்ள 22 மாகாணங்களில் இருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இ-சிகிரெட் தாக்கத்தின் காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதியாகியுள்ளதாகவும் தொடர்ந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த இளைஞர்களின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக தகவல் ஏற்கனவே வெளிவந்தது.

இந்த நிலையில் இப்போது நியூயார்க் நகர புலனாய்வாளர்கள் வைட்டமின்-இ எண்ணெய் கொண்ட கள்ளச்சந்தை கஞ்சா மின் சிகரெட் தயாரிப்புகளில் கவனம் செலுத்துவதாக தகவல்கள் கூறப்படுகிறது.

மேலும் கலிபோர்னியா, மின்னசோட்டா உள்ளிட்ட மாகாணங்களில் இந்த மர்ம நுரையீரல் நோய் தாக்கி 5 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வடக்கு கரோலினாவில் உள்ள நுரையீரல் மருத்துவ நிபுணர் டேனியல் பாக்ஸ் கூறும்போது, “நான் பரிசோதித்த நோயாளிகளுக்கு நிமோனியா தொற்று இல்லாத லிபோய்டு நிமோனியா இருப்பதாக தெரிய வந்தது. இது எண்ணெய்கள் அல்லது லிபிட் (கொழுப்பு) கொண்ட பொருட்கள் நுரையீரலுக்குள் நுழையும் போது ஏற்படலாம்” என்றார்.

நியூயார்க் மாகாணத்தில் ஆய்வுக்கூடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், அங்கு பாதிக்கப்பட்ட 34 பேரும் பயன்படுத்திய கஞ்சா குழாய்களில் அளவுக்கு அதிகமான வைட்டமின்-இ எண்ணெய் படலங்கள் இருப்பது தெரிய வந்தது.

வைட்டமின்-இ சத்து வாய் வழியாக, சரும வழியாக எடுக்கக்கூடியது என்ற போதும் அதை உள்ளுக்குள் இழுக்கிறபோது அது தீங்கை விளைவிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.