கனடாவில் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்டுள்ள 28 வயதான தமிழ் இளைஞர்!

கனடாவில் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் ஒருவர் தலைமறைவாக உள்ளார் எனவும் அவர் பற்றிய தகவல்களை தருமாறும் கனேடிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள 28 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன் என்பவரையே ரொரன்ரோ பொலிஸார் தேடிவருகின்றனர்.

இவர் வன்முறையில் ஈடுபடக்கூடிய ஆபத்தான நபரானவர் என்று நம்பப்படுகிறது. அவரைக்கண்டால் அவருக்கு அருகில் செல்லவேண்டாமெனவும் உடனடியாக 9-1-1 என்ற இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆயுதங்களை மறைத்து எடுத்துச் சென்றமை, துப்பாக்கி காட்டியமை பொதுமக்களின் அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களை வைத்திருந்தமை, மற்றும் தடைசெய்யப்பட்ட துப்பாக்கி வைத்திருந்தமை, போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர் தேடப்பட்டு வருகின்றார்.

குறித்த இளைஞன் 5.8 அடி உயரமும் கறுப்பு நிற தலைமுடி பழுப்பு நிற கண்களை கொண்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இடது தோள்பட்டையில் தேவதை உருவம் ஒன்றை பச்சை குத்தியுள்ளார்.இடது கையில் வட்டம் போன்ற அடையாளம் உள்ளதாக பொலிஸார் அவரை அடையாளப்படுத்தியுள்ளனர்.