வெடித்து சிதறிய பெட்ரோல் நிலையம்… வீடியோ!

கம்போடியா நாட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பெட்ரோல் நிலையம் திடீரென வெடித்து சிதறியதில் 13 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கம்போடியாவில் ஆசிரியர் வேலை தேடி வரும் இங்கிலாந்தை சேர்ந்த ஜோ எலெஃப்டெரியோ (22) என்பவரும், அமெரிக்காவை சேர்ந்த அவருடைய தோழி அபிகெய்ல் அலெக்சாண்டர் (18) என்பவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளனர்.

அந்த சமயத்தில் 2,000 லிட்டர் திரவ எரிபொருளைக் கொண்ட ஒரு டேங்கர் டிரக், உரிமம் பெறாத எல்பிஜி எரிவாயு நிலையத்தின் பின்புறம் ஒரு சேமிப்பு தொட்டியில் எரிவாயுவை மாற்றிக் கொண்டிருந்தது.

எதிர்பாராத நேரத்தில் அந்த எரிவாயு நிலையம் திடீரென வெடித்து சிதறியதில் 13 பேர் காயமடைந்துள்ளனர். இதில் இந்த இரண்டு பேர் மட்டும் படுகாயமடைந்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருவருக்குமான மருத்துவமனை கட்டணங்களும் அதிகரித்து வருவதால், ஜோ தாய்லாந்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் அபிகெய்ல் போதிய பண வசதி இல்லாத காரணத்தால், அதே மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், வென்டிலேட்டருடன் சுவாசிப்பதாகவும் அவரது தாயார் கூறியுள்ளார்.