மணமகன் படத்தை கணவரிடம் காட்டி நெகிழ்ச்சியடைந்த நளினி!

பரோலில் இருக்கும் நளினி வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் இருக்கும் முருகனை நேரில் சந்தித்து, மணமகனின் புகைப்படங்களை காட்டி மகிந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவகாந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் தற்போது தன்னுடைய மகளின் திருமணத்திற்காக ஒரு மாத பரோலில் வெளியில் வந்துள்ளார்.

அவருடைய கணவர் முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின் படி 15 நாட்களுக்கு ஒருமுறை அவரை நேரில் சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை ஆண்கள் சிறையில் உள்ள தன்னுடைய கணவரை நளினி நேரில் சந்தித்து, மகளின் திருமணம் குறித்து உரையாடியுள்ளார். பின்னர் முருகனின் விருப்பத்தை தெரிந்துகொள்வதற்காக மணமகனின் புகைப்படங்களை காண்பித்து மகிழ்ச்சியடைந்துள்ளார்.

அதேசமயம் முன் கூட்டியே தன்னை விடுதலை செய்யுமாறு நளினி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக உள்துறைச் செயலாளர் சார்பிலும், வேலூர் மகளிர் சிறைக் கண்காணிப்பாளர் சார்பிலும் இன்று பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஆயுள் கைதிகள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என உரிமை கோர முடியாது என்றும், ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுக்க சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.