என்னையே புறக்கணித்தீர்களா? சரியான பதிலடியை கொடுத்த இந்திய வீரர்!

டிரினிடாட்டில் நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் இறுதி அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில், மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணிக்காக ஆட்டமிழக்காமல் 204 ரன்கள் எடுத்தபோது, ​​இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்களில் ஒருவர் என்ற பெருமையை பெற்றார் ஷூப்மேன் கில்.

இந்திய ஏ கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள் நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு, அங்கு 20 ஓவர், ஒருநாள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட அதிகாரபூர்வமற்ற தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் இளம் வீரர் ஷூப்மேன் கில், இந்திய அணியின் சீனியர் அணியில் மேற்கு இந்திய தீவுகள் தொடருக்கு இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரை தேர்வு செய்யாமல் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் மனிஷ் பாண்டேவை இந்திய அணி தேர்வு செய்திருந்தது. அவர் தேர்வு செய்யாததற்கு பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தார்கள். உலக கோப்பை தொடருக்கு முன் நடைபெற்ற நியூசிலாந்து தொடரில் ஷூப்மேன் கில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் இந்திய சீனியர் அணியில் புறக்கணிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து ஏ அணிக்காக விளையாடி வந்தார்.

மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்றுவரும் இந்திய ஏ அணிக்கான மூன்றாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய ஷூப்மேன் கில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்களும் மேற்கிந்திய தீவுகள் அணி 193 ரன்களை மட்டுமே எடுக்க, அடுத்த இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் 3 விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் விழுந்தது. அதனை அடுத்து, ஜோடி சேர்ந்த கேப்டன் ஹனுமா விஹாரி, ஷூப்மேன் கில் இந்திய அணியை தூக்கி நிறுத்தினார்கள்.

இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி 365 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய ஏ அணி ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இந்திய அணி ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்த பொழுது ஷூப்மேன் கில் 204 ரன்களுடனும், 250 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 19 பவுண்டரிகளுடன் அடித்தார். ஹனுமா விஹாரி 118 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தற்போது ஷூப்மேன் கில்க்கு 19 வயது நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அவரது இரட்டை சதம் ஆனது இந்தியாவுக்காக அங்கீகரிக்கப்பட்ட அணியில் இந்திய அணியின் வீரர் ஒருவர் மிக இளம்வயதில் அடித்த இரட்டை சதமாக பதிவானது.

இதற்கு முன்பாக 17 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய போர்டு அணிக்காக களம் இறங்கிய கௌதம் காம்பீர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இரட்டை சதமடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது கம்பீருக்கு வயது இருபதாக இருந்தது. கௌதம் காம்பீரின் 17 வருட சாதனையை தற்போது முறியடித்து, மேலும் தன்னை அணியில் தேர்வு செய்யாத தேர்வு குழுவினருக்கு பதிலடியும் கொடுத்துள்ளார். இளம் வீரர் ஷூப்மேன் கில்க்கு ஆதரவாக ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங் ஆகியோர் குரல் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.