பெண்கள் எப்படி தங்களை பாதுகாத்து கொள்வது?

இக்காலத்தில் ஒரு குடும்பத்தை நடத்த பெண்களும் வேலைக்கு செல்கின்றனர். படித்து முடித்த உடனேயே பல பெண்கள் வேலைக்கு சென்று தன் தாய், தந்தைக்கு உதவியாக இருக்கின்றனர்.

திருமணமான பெண்களும் வேலைக்கு சென்று தன் கணவருக்கு உதவியாக இருகின்றனர். வேலைக்கு செல்லும் இடத்திலும், வீட்டிற்கு வரும் வழியிலும் தங்களை எப்படி பாதுகாத்து கொள்வது பற்றிய சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

முதலில் பெண்கள் யாருமில்லாத இடங்களில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பெரிய நூலகங்கள் போன்ற இடங்களில் ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களிலும், அலுவலகத்திலும் தனியாக இருக்கும் சந்தர்ப்பங்களை தவிர்ப்பது நல்லது.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க போகும்போது இருசக்கர வாகனத்தையோ அல்லது காரையோ நீண்ட தொலைவில் நிறுத்தாமல் கடைக்கு அருகிலேயே நிறுத்தி வைப்பதுதான் மிகவும் பாதுகாப்பானது.

ஏனெனில் இரவு சமயங்களில் கடையில் இருந்து சிறிது தூரம் சென்று வாகனத்தை எடுத்துவர சென்றால் அச்சமயத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

பொது இடம், பார்ட்டி போன்ற இடங்களில் குளிர்பானங்களை வைத்து விட்டு வேறு இடத்திற்கு எழுந்து செல்லாமல் இருப்பது பாதுகாப்பானதாகும்.

இப்போது பெண்கள் பெரிய நிறுவனங்களில் வேலை செய்து வருவதால் நள்ளிரவு நேரங்களில் கூட வீட்டிற்கு வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்போது அவர்கள் காரில் வருவது போல் இருந்தால் முதலில் கார் ஓட்டுநரை கவனிக்க வேண்டும்.

அவர் குடித்திருக்கிறாரா என்பதை அவர் கண்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். காரில் டிரைவருக்குப் பக்கத்தில் சம்பந்தமில்லாத ஆள் யார் உட்கார்ந்திருந்தாலும் காரில் ஏறக்கூடாது.

காரில் ஏறி உட்கார்ந்தவுடன் செல்போனைக் கையில் எடுத்துப் பேச ஆரம்பிக்கக்கூடாது. இடையில் யார் காரில் ஏறுகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

கார் செல்லும் பாதையை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். வேறுபாதையில் கார் செல்லுமானால் அதை உரிய நேரத்தில் போன் மூலம் பிறருக்குத் தெரிவிக்க வேண்டும். காரில் செல்லும்போது தூங்கக்கூடாது.

சமயோசிதமாக நடந்து கொள்வதற்கு முக்கியத் தேவை, எப்போது வேண்டுமானாலும் பாதிப்பு வரலாம் என்ற எச்சரிக்கை உணர்வுதான் கட்டாயம் இருக்க வேண்டும்.

கூட்டமுள்ள பகுதிகளில் பெண்கள் நடந்து செல்லும்போது கையைத் தொங்கப் போட்டுக் கொண்டு நடக்கக் கூடாது.

கைகளைக் கட்டிக் கொண்டு நடந்தால் பின்புறம் இருந்து பிடிப்பவரையோ, அருகே வந்து இடிப்பவரையோ முழங்கையால் தாக்க முடியும்.

பெப்பர் ஸ்பிரே போன்ற தற்காப்புப் பொருட்களையும் பயன்படுத்தி நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இதுமட்டுமல்லாமல் பெண்கள் தற்காப்பு கலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவும் அவர்களை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவும்.