தாயையும் மகனையும் ரயில் முன் தள்ளிய நபர்: சிறுவன் பலியான சோகம்!

ஜேர்மனி ரயில் நிலையம் ஒன்றில் நின்றுகொண்டிருந்த ஒரு தாயையும் மகனையும், வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் முன் ஒருவர் திடீரென தள்ளி விட்டதில், அந்த சிறுவன் பரிதாபமாக பலியானான்.

ஃப்ராங்க்பர்ட் ரயில் நிலையத்தில் ஏராளமான பள்ளி மாணவர்கள் உட்பட பயணிகள் கூட்டமாக நின்று கொண்டிருக்கும்போது, திடீரென ஒருவர் ஒரு 40 வயது மதிக்கத்தக்க பெண்ணையும், அவரது எட்டு வயது மகனையும் வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் முன் பிடித்துத் தள்ளினார்.

இருவரும் ரயில் பாதையில் விழுந்த நிலையில், அந்த பெண் ரயில் தண்டவாளங்களுக்கிடையில் உள்ள இடைவெளியில் படுத்து தப்பினார்.

ஆனால் அவரது மகன் மீது ரயில் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான்.

இதற்கிடையில் அவர்களைத் தள்ளி விட்ட அந்த நபர் அங்கிருந்து தப்பிக்க முயல்கையில், பயணிகள் அவரை விரட்டிப் பிடித்தனர்.

அந்த நபர் எரித்ரியாவைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு சுமார் 40 வயது இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

அவரை பயணிகள் பொலிசாரிடம் ஒப்படைக்க, பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், அவர் அந்த பெண்ணுக்கு அறிமுகமானவர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் சம்பவத்தை பார்த்த பலரும் பயந்து அலறினர், அவர்களில் சிலர் அங்கேயே மயங்கி விழுந்தனர்.

அவர்களுக்கும் சிகிச்சையும், மன நல ஆலோசனையும் அளிக்கப்பட்டு வருகிறது, 10 நாட்களுக்கு முன்புதான், 34 வயது பெண் ஒருவரை, ஒரு நபர் Voerde ரயில் நிலையத்தில் வேகமாக வந்த ரயில் முன் தள்ளி விட்டதும், அவர் ரயில் மோதி உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.