ஐதேக வேட்பாளராக சஜித்!

வரும் அதிபர் தேர்தலில் ஐதேக வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்தும் யோசனையை  ஐ.தேக நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் பலரும் நேற்று முன்மொழிந்துள்ளனர்.

இதையடுத்து, கட்சியின் வேட்பாளர் விரைவில்  அதிகாரபூர்வமான தெரிவு செய்யப்படுவார் என ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நேற்று நடந்த ஐதேக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்தும் யோசனை ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்மொழிந்துள்ளனர் என்று தனது பெயரை வெளியிட விரும்பாத உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஐதேக தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்றக் குழு என்பன அதிபர் வேட்பாளர் குறித்து இறுதி முடிவை எடுக்கும் என்றும், அது அதிகாரபூர்வ முடிவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும், நேற்றைய கூட்டத்தில், ஐதேக செயற்குழுக் கூட்டத்தையோ நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தையோ எப்போது கூட்டுவது என்று முடிவெடுக்கப்படவில்லை.

அதேவேளை கட்சியின் சில உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளனர் என்று தெரிவித்த ஐதேக பொதுச்செயலர் அகில விராஜ் காரியவசம், ஏனையவர்கள் ஓகஸ்ட் 5ஆம் நாள் தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னர் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.