டிரம்பின் வார்த்தைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஏஞ்சலா மெர்க்கல்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொடர்ந்து இனவெறி கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருவதற்கு, ஜேர்மன் சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பிக்களுக்கு எதிராக, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இனவெறி கருத்து தெரிவித்தார். அவர், முற்போக்கு சிந்தனையுள்ள குறித்த எம்.பிக்கள் எங்கிருந்து வந்தார்களோ, அந்த நாட்டிற்கே திரும்ப செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதுபோன்று வெளிநாட்டவருக்கு எதிரான கருத்துக்களை டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கு பல்வேறு நாட்டின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜேர்மன் சான்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘டிரம்பின் வெளிநாட்டவர்களுக்கு எதிரான ட்விட்டுகள் அமெரிக்காவை சிறந்ததாக்குவதற்கு எதிராக செல்கின்றன.

இதுபோன்ற தாக்குதல் கருத்துக்களில் இருந்து என்னை நான் உறுதியாக விலக்குகிறேன். நான் ஒற்றுமையை உணர்கிறேன். அமெரிக்காவின் வலிமை என்னவென்றால், நாட்டை சிறந்ததாக மாற்றுவதற்கு வெவ்வேறு (இன) மக்கள் பங்களித்தனர்’ என தெரிவித்துள்ளார்.