அக்கரப்பத்தனையில் சோகம்…

நுவரெலியா, அக்கரப்பத்தனை – டொரிங்டனில் வெள்ளத்தில்  அள்ளுண்டு சென்ற இரட்டைச் சகோதரிகளில் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்ட நிலையில் மற்றைய சிறுமியின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை, டொரிங்டனிலுள்ள பாடசாலையில் தரம் 07 இல் கல்வி கற்கும் 12 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகளான மதியழகன் லெட்சுமி, மதியழகன் சங்கீதா ஆகிய மாணவிகளே இவ்வாறு உயிரிழந்தனர்.

டொரிங்டன் தோட்டத்திலிருந்து கொத்மலை ஓயாவுக்கு நீரைக் காவிச் செல்லும் கால்வாய் ஒன்றுக்கு அருகிலுள்ள தமது வீட்டுக்குச் செல்ல முயன்ற மாணவிகள் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது, மாணவிகள் இருவர் காணாமல் போயிருந்தனர். இந்த நிலையில் அதில் ஒரு மாணவி நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், மற்றைய மாணவியும் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.