மனைவியை 60 முறை கொடூரமாக குத்தி கொலை செய்த பிரித்தானியர்!

பிரித்தானியாவில் சூதாட்டத்தில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த நபர் தமது மனைவியை 60 முறை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவத்தில் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

வங்கதேச நாட்டவரான 47 வயது ஜலால் உதின் என்பவரே தற்போது மனைவியை கொடூரமாக கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

இந்திய உணவகம் ஒன்றில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ள ஜலால் உதின் சூதாட்டத்தில் அடிமை என கூறப்படுகிறது.

இதனால் பலமுறை இவருக்கும் 31 வயதான இவரது மனைவி அஸ்மா பேகத்திற்கும் இடையே பண விவகாரம் தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

மட்டுமின்றி கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இது தொடர்பில் அஸ்மா பொலிசாரிடமும் முறையிட்டுள்ளார்.

சூதாட்டத்திற்காக மனைவியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபடுவதையே வழக்கமாக கொண்டுள்ள ஜலாலிடம் இருந்து தப்ப,

அஸ்மா, தமது கணவர் கேட்கும்போதெல்லாம் பணம் தந்தும் வந்துள்ளார். ஆனால் சூதாட்டத்தில் பெரும்பாலும் தோல்வியையே ஜலால் சந்தித்துள்ளார்.

அஸ்மா கொல்லப்படுவதற்கு முந்தைய நாள் உணவு மற்றும் இதர செலவினங்களுக்காக தமது வங்கி கணக்கில் இருந்து 200 பவுண்டுகள் எடுத்துவர தமது கணவர் ஜலாலை அனுப்பியுள்ளார்.

ஆனால் அந்த பணத்தை ஜலால் சூதாட்டத்திற்கு பயன்படுத்திவிட்டு வெறும் 20 பவுண்டுகளில் பொருட்களை வாங்கிவிட்டு குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.

இந்த விவகாரத்தை அஸ்மா கண்ணீருடன் தமது உறவினர் ஒருவருக்கு தொலைபேசியில் பகிர்ந்துள்ளார்.

அடுத்த நாள், வங்கதேசத்தில் உள்ள ஜலாலின் சகோதரர் தொலைபேசியில் அழைத்து அஸ்மாவின் சகோதரரிடம் நடந்தவற்றை கூறி,

அவர்களின் குடியிருப்புக்கு சென்று விசாரித்துவர கோரியுள்ளார். அதன்படி அஸ்மாவின் சகோதரர் ஜலாலின் குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

அங்கே அஸ்மா கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அவரது முகம் கத்தியால் பலமுறை சிதைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலில் எத்தனை முறை கத்தியால் தாக்கப்பட்டுள்ளது என்பதை எண்ணுவதே கடினமாக இருந்தது என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் ஜலால், தமது மனைவியே தம்மை தாக்கியதாகவும், அவரது தாக்குதலில் இருந்து தப்பிக்க தாம் கடுமையாக முயன்றதாகவும் விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் அனைத்தும் ஜலாலுக்கு எதிராக அமைந்ததால் அவர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.

அவருக்கான தீர்ப்பு விபரங்கள் வியாழனன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.