சுவிட்சர்லாந்தை உலுக்கிய இரட்டைக் கொலை: சிக்கிய இளம் தம்பதி!

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் இரட்டைக் கொலை வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இளம் தம்பதி மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் மாதம் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கார் பரிவர்த்தனைகள் தொடர்பில் இரட்டைக் கொலை புரிந்த இளம் தம்பதி உள்ளிட்ட மூவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி Bülach மாவட்ட நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட உள்ளது.

பெர்ன் மண்டலத்தில் உள்ள Utzigen பகுதியில் குடியிருக்கும் இளம் தம்பதி ஒன்று இந்த இரட்டைக் கொலை வழக்கில் சிக்கியுள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சூரிச் மண்டலத்தின் Bülach பகுதியில் வாகன பரிவர்த்தனை தொடர்பில் நபர் ஒருவரை இந்த தம்பதி கொடூரமாக கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது வாகனத்தை கைப்பற்றும் நோக்கிலேயே அவரை இவர்கள் தாக்கியுள்ளனர்.

பின்னர் சடலத்தை Boppelsen பகுதி அருகே மறைவு செய்துள்ளனர். ஆனால் அப்பகுதி வழியே கடந்து சென்ற வழிபோக்கர் ஒருவரால் சடலம் கண்டறியப்பட்டு, பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கொலையானது கணவன் மற்றும் அவரது அலுவலக சக ஊழியர் ஒருவரால் நடத்தப்பட்டுள்ளது. இதில் கொலை செய்யப்பட்ட நபரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் சடலத்தை Utzigen பகுதியில் உள்ள இவர்களது குடியிருப்புக்கு அருகாமையிலேயே புதைத்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், 2016 ஜூலை மாதம் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்த இரு கொலை வழக்கு தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளது.