அரையிறுதியில் டோனியை தாமதமாக இறக்கியது யார்?

உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் நட்சத்திர வீரர் டோனியை தாமதமாக இறக்கியதற்கு யார் காரணம் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது.

மான்செஸ்டரில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்தய அணி தோல்வியடைந்து, உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.அரையிறுதியில் டோனி ஏன் 7வது வீரராக இறக்கப்பட்டார் என்ற சர்ச்சை வெடித்தது. நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்டகாரர்கள் மளமளவென சரிந்தனர்.

இதனையடுத்து, 5வது வீரராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும் சிறிது நேரத்தில் வெளியேறினார். 6வது வீரராக பாண்டியா இறங்கினார். டோனி 7வது வீரராக களமிறக்கப்பட்டார்.டோனி மட்டும் 5வது வீரராக இறங்கி இருந்தால், விக்கெட்டுகள் வீழ்வதை நிறுத்தி ஆட்டத்தையே மாற்றி இருப்பார் என்ற கருத்து ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களின் மத்தியிலும் உள்ளது.

டோனியை 7வது இறக்க யார் காரணம் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தான் டோனியை 7 வது இடத்திற்கு அனுப்ப முடிவு செய்ததாக டி.என்.ஏ செய்தி நிறுவனம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்திய அணியின் நிர்வாகிகள் குழு, அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருடன் இந்தியாவின் உலகக் கோப்பை செயல்திறனை மதிப்பாய்வு செய்ய உள்ளது. அப்போது, டோனியை அந்த நிலையில் அனுப்புவதற்கான காரணம் கேட்கப்படலாம். அதற்கு அவர்கள் அளிக்கும் காரணம் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.