30 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்த வெளிநாட்டவர் செய்த செயல்..

கென்யாவை சேர்ந்த எம்.பி ஒருவர் 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் படித்தபோது வாங்கிய 200 ரூபாய் கடனைத் திருப்பிக் கொடுக்க இந்தியா வந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவின் யாரிபாரி சாச்சே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ரிச்சர்ட் டோங்கி என்பவர், 1980களில் மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரியில் படித்துள்ளார்.

அப்போது அருகில் இருந்த காசிநாத் ஹவ்லி என்பவரின் மளிகைக் கடையில் கடன் வாங்குவதும், கொடுப்பதுமாக இருந்துள்ளார் டோங்கி.

இந்நிலையில் படிப்பை முடித்து கென்யா சென்றபின் அரசியல் கட்சியில் பணியாற்றி எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆண்டுகள் பல கடந்த போதும், இந்தியாவில் தனக்கு கிடைத்த உதவியை நன்றியை மறவாமல் நினைவில் வைத்திருந்த டோங்கி, மனைவியுடன் இந்தியா வந்து, தனக்கு கடன்கொடுத்த மளிகைக்கடைக்காரரை அவுரங்காபாத்தில் தேடி அலைந்துள்ளார்.

ஒருவழியாக சிரமப்பட்டு அவரின் வீட்டை கண்டுபிடித்த டோங்கி, 200 ரூபாயை திரும்பக் கொடுத்ததுடன், கென்யாவிற்கு தமது விருந்தினராக வருமாறு காசிநாத் ஹவ்லி குடும்பத்தாருக்கு அழைப்பு விடுத்தார்.

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்யும் பலர் வாழும் உலகில் இப்படியும் ஒரு நேர்மையான மனிதரா என டோங்கியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.