ஏமாற்றமாக இருந்தாலும் கடைசி வரை இந்திய அணி போராடியது! பிரதமர் மோடி

நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியுற்றது குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

மான்செஸ்டரில் நடந்த உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 240 ஓட்டங்கள் வெற்றி இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.

பின்னர் ஆடிய இந்திய அணி 49.3 ஓவரில் 221 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 2வது முறையாக உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘முடிவு ஏமாற்றமளித்தாலும், இந்திய அணி கடைசி வரை போராட்டக் குணத்தை வெளிப்படுத்தியது அருமை.

இந்தத் தொடர் முழுதும் இந்திய அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு, பீல்டிங் அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டது. வெற்றிகளும், தோல்விகளும் வாழ்க்கையின் அங்கம். எதிர்காலத் தொடர்களில் வெற்றி பெற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.