உயிரிழந்த இந்தியரின் மனைவி.. வங்கிகணக்கில் இருந்த கோடிக்கணக்கான பணம் என்ன ஆனது?

துபாயில் வசிக்கும் இந்தியரின் மனைவி திடீரென உயிரிழந்த நிலையில் கணவன் – மனைவி இருவரின் பெயரிலும் வங்கியில் கூட்டு கணக்கு இருந்ததால் பணத்தை எடுக்க முடியாமல் கணவர் தவித்துள்ளார்.

இந்தியரான நரேந்திர கஜ்ரியா தனது மனைவி ஹீனாவுடன் துபாயில் வசித்து வந்தார்.

கஜ்ரியாவுக்கு என தனியாக வங்கி கணக்கு இல்லை, அதற்கு பதிலாக கஜ்ரியா – ஹீனா பெயரில் கூட்டு வங்கி கணக்காக ஐக்கிய அமீரகத்தில் உள்ள பல வங்கிகளில் 1 மில்.லியன் டிராம்கள் ($272,242) இருந்தது.

இந்நிலையில் ஹீனா எதிர்பாராதவிதமாக திடீரென உயிரிழந்துள்ளார்.

இதன்பின்னர் சட்ட வாரிசுகளுக்கு சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறையின் ஒரு பகுதியாக கஜ்ரியா – ஹீனாவின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டது.

இதனால் கஜ்ரியாவால் வங்கியிலும், ஏடிஎம்மிலும் பணம் எடுக்க முடியாததோடு, அவர் வங்கி கார்டை வைத்து எந்த பொருளையும் வாங்க முடியவில்லை.

இதனால் கையில் பணம் இல்லாமல் தவித்த கஜ்ரியா தன் கையில் இருந்த சிறிது பணத்தை வைத்து புதிய வங்கி கணக்கில் தன் பெயரில் தொடங்கினார்.

இது குறித்து கஜ்ரியா கூறுகையில், நல்லவேளையாக வங்கி கணக்கை தொடங்கிய அடுத்த நாளே எனக்கு சம்பளம் வந்ததால் என்னிடம் பணம் வந்தது.

அதுவரை பணம் இல்லாமல் தவித்துவிட்டேன். இந்த பிரச்சனை ஐந்து மாதங்கள் நீடித்த நிலையில் என் வங்கி கணக்கில் தற்போது அனைத்து பணமும் நீதிமன்ற உத்தரவின்படி திரும்ப வந்துவிட்டது.

ஐக்கிய அமீரகத்தில் கூட்டு வங்கி கணக்கு வைத்திருப்பது இவ்வளவு பெரிய தலைவலியை ஏற்படுத்தும் என எனக்கு முன்னரே தெரியாமல் போய்விட்டது என கூறியுள்ளார்