சொத்துக்களை அபகரிக்க இளைஞர் உடலில் ஏற்றப்பட்ட ஹெச்.ஐ.வி இரத்தம்..

தமிழகத்தில் தங்கள் சொத்தை அபகரிக்க தனது மகனுக்கு ஹெச்.ஐ.வி இரத்தத்தை நபர் ஒருவர் ஊசி மூலம் ஏற்றியதாக தந்தை கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் மகன் வெங்கடேச பெருமாள் (19). இவர் வாய் பேச முடியாத மூளை வளர்ச்சி இல்லாத மாற்றுத்திறனாளி ஆவார்.

இவருக்கு ஹெச்.ஐ.வி ரத்த ஊசியை அதே பகுதியைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர் செல்வகுமார் போட்டுள்ளதாக ஏழுமலை ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

ஏழுமலை கூறுகையில், கடந்தாண்டு டிசம்பர் நானும் என் மனைவியும் வீட்டில் இல்லாத போது செல்வகுமார் என் மகனுக்கு ஊசி போட்டார்.

இது குறித்து பின்னர் ஜாடை மாடையாக அவன் என்னிடம் சொன்னான். இது குறித்து செல்வகுமாரிடம் கேட்ட போது என் மகனுக்கு காய்ச்சலுக்காக ஊசி போட்டதாக கூறினான்.

சில நாட்கள் கழித்து ஊசி போட்ட இடத்தில் கட்டியாக மாறியதால் வெங்கடேசபெருமாளை மருத்துவரிடம் காட்டினேன்.

அவனுக்கு இரத்த பரிசோதனை செய்த போது ஹெச்.ஐ.வி இருப்பதாக சொன்னார்கள்.

ஊசி போட்டதால் ஹெச்.ஐ.வி ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் செல்வகுமார் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரித்தேன்.

ஆனால் காய்ச்சல் ஊசி தான் போட்டேன் என அவன் மழுப்பினான்.

பிறகு தான் என் சொத்துக்காக அவன் இப்படி செய்ததாக எனக்கு சந்தேகம் எழுந்தது. எனக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. அதை, என் ஒரே மகனுக்காக வைத்துள்ளேன். அந்த நிலத்தை செல்வக்குமார் கேட்ட நிலையில் நான் கொடுக்கவில்லை.

அதனால் தான் இப்படி செய்துள்ளார் என சந்தேகிக்கிறேன்.

மூளை வளர்ச்சி இல்லாத என் மகனைக் கொலை செய்துவிட்டால் சொத்தை வாங்கிவிடலாம் என்று ஹெச்.ஐ.வி ஊசியைப் போட்டுள்ளார் என கூறினார்.

இது தொடர்பாக ஆட்சியர் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.