கூட்டமைப்புக்கு மோடி கொடுத்த வாக்கு…

இலங்கை நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்கு கொடுத்துள்ளார்.

கொழும்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைகலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட சிலர் இதில் கலந்துக்கொண்டுள்ளனர்.

மோடி உடனான சந்திப்புக்கு பின்னர் பேட்டியளித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கூறியதாவது, இந்திய பிரதமருடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு சுமார் 15 நிமிடங்கள் மாத்திரமே வழங்கப்பட்ட நிலையில், தமது உரிய கலந்துரையாடல்களை நடத்துவதற்கு இது போதுமான காலமாக அமையவில்லை என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்தேன்.

இலங்கை தமிழ் பிரச்சினை குறித்து விரிவாக கலந்துரையாட வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும், தமக்கு அதற்கான சந்தர்ப்பத்தை டெல்லியில் ஏற்படுத்தி தருமாறும் கேட்டுக்கொண்டேன்.

அதற்கு பதிலளித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தான் விரைவில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உறுதியளித்ததாக அக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.