வடக்கு ஆளுநரால் தான் அச்சுறுத்தப்பட்டேன்! யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் பகீர் புகார்!

யாழ் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி நியமன விவகாரம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஆளுநர் தரப்பும், சத்தியமூர்த்தி தரப்பும் எதிரும் புதிருமான மல்லுக்கட்டுவதால், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

ஐ.தே.கவின் வசமுள்ள சுகாதார அமைச்சும், ஜனாதிபதி மைத்திரிபாலவின் கீழான ஆளுநருக்குமான மோதலாக இந்த விடயம் மாறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இன்று அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பதிற் பணிப்பாளராகக் கடமையைப் பொறுப்பேற்ற பின்னர் மாகாண அதிகாரிகளால் அரச பணி செய்ய விடாது தடுக்கப்பட்டமையையும் தன்னுடைய குறுகிய கால சேவைக் குறிப்பையும் பகிர்ந்து கொள்கின்றார்.

நான் கடமையைப் பொறுப்பேற்று 2 ஆவது வாரம் ஆளுநரின் செயலாளர் கூறியதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் (PDHS) கடமையைச் செய்ய விடாது என்னைத் தடுத்தார்.

எனவே நான் மத்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் (DGHS) அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவரது பணிப்பில் கடமையைச் செய்ய முற்பட்ட போது மீளவும் ஆளுநரின் செயலாளர் தடுத்தார்.

தெல்லிப்பழையில் நடந்த ஆளுநரின் கூட்டத்துக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்னை அழைத்திருந்தார். அங்கு சென்ற போது எனக்குரிய ஆசனத்தில் பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தேவநேசன் இருந்தார். இதனால் எனக்கு வேறு ஒரு ஆசனம் வழங்கப்பட்டது.

27.05.2019 அன்று ஆளுநரின் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டேன். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் ஆளுநர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் தேவநேசன் ஆகியோர் பங்குபற்றினர்.

அக்கூட்டத்திலே ஆளுநர் என்னை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டார். கடமைக்கு வர வேண்டாம் என்று தடுத்தார்.

ஆளுநர் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் தேவநேசனிடம் உங்களுக்குக் கடமையைச் செய்வதில் என்ன பிரச்சினை என்று கேட்டார். அதற்கு தனக்கு கோபம் வருவது தான் பிரச்சினை என்றும் தற்போது மருத்துவ ஆலோசனைப்படி தியானம் செய்து கட்டுப்படுத்தியுள்ளதாகவும் தேவநேசன் தெரிவித்தார்.

என்னை யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் கடமையைச் செய்ய வேண்டாம் என்று ஆளுநர் தடுத்த போது நான் எழுத்து மூலம் அதனைத் தருமாறு கேட்டேன். ஆளுநர் கடிதத்தை தராமல் ஊடகங்களுக்குத் தவறான செய்தியை வெளியிட்டார்.

ஆளுநரின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னைக் கடமைக்கு வரவேண்டாம் என்றும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரைக் கடிதம் கொடுக்குமாறும் வற்புறுத்தினார்.

ஆளுநரின் செயலாளர் மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட PDHS அவர்களை யாருக்காக, எதற்காகத் தவறாக வழிநடத்துகின்றார்?

13 ஆவது திருத்தத்தில் இல்லாத விடயத்தை ஆளுநர் தூக்கிப்பிடிப்பது யாருக்காக, எதற்காக என்பது தெரியவில்லை. ஆரம்பத்தில் குழப்படைந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது தெளிவாக இருக்கிறார்கள்.

அவர்கள் என்னைக் கடமையாற்றுமாறும் கேட்கின்றார்கள். 13 ஆவது திருத்தத்தில் வைத்தியர்கள் நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு யாவுமே மத்திய அரசினால் மேற்கொள்ளப்படும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் 7 சுகாதார சேவை மற்றும் வைத்தியசாலைகளில் சிரேட்ட மருத்துவ நிருவாகப் பதிவாளர்களுக்கு வெற்றிடம் நிலவுகிறது. எனினும் தகுதி வாய்ந்த 4 பேரே வடபகுதியில் இருக்கிறார்கள்.

யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளாராகக் கடமையாற்றிக் கொண்டு சில மணிநேரங்கள் யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராகக் கடமையாற்றினாலும் பல விடயங்களை என்னால் செய்ய முடியும்.

சாவகச்சேரி தள வைத்தியசாலையில் 120 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட விபத்து அவசர சிகிச்சைப் பிரிவை இயக்குவது பற்றி சிந்தித்தேன்.

யாழ். மாவட்டத்தில் நோயாளர் காவு வண்டிகள் வழங்கலில் சரியான திட்டமிடல் இருக்கவில்லை. தீவுப் பகுதிகளுக்கு நோயாளர் காவு வண்டிகளை வழங்கினேன்.

தீவுப் பகுதிக்குச் சென்ற போது பொதுமக்கள் யாழ். போதனா வைத்தியசாலை கிளினிக்குகளுக்கு நேரத்துடன் வருவதில் உள்ளப் இடர்ப்பாட்டையும் கிளினிக் முடிந்து திரும்பவும் தொலை தூர தீவுகளுக்கு படகுப் பயணத்தினை மேற்கொள்ள முடியாதிருப்பதையும் தெரிவித்தார்கள்.

இவ்விடயம் குறித்து கிளினிக் பகுதி அலுவலகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தேன். திட்டங்களை மேற்கொண்டுள்ளேன்.

யாழ்ப்பாணத்தில், வடபகுதியில் சுகாதாரத் துறையினை மேம்படுத்த விரும்பியிருந்தேன். எனக்கு சுகாதாரத் துறையில் 20 வருட அனுபவம் இருக்கிறது. யுத்த காலத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை வைத்திய அதிகாரியாக செயற்பட்ட போது மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் கடமையைச் செய்தேன்.

வவுனியாவில் இருக்கும் போது இடப்பெயர்வு முகாம் வைத்திய சேவைப் பணிப்பாளராகவும் கடமையாற்றினேன். அப்போது மேலதிக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரவும் டெங்கு நோய் கட்டுப்படுத்தும் விசேட செயலணியின் தலைவராகவும் கடமையாற்றினேன்.

அன்று கிளிநொச்சியிலோ வவுனியாவிலோ என்னைப் பணிசெய்யவிடாது எவருமே தடுத்ததில்லை.

இன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள மாவட்ட சுகாதார சேவைகள் பணிமனைப் பதில் பணிப்பாளர் கடமையை நான் விரும்பிக் கேட்கவில்லை. தகுதியுள்ள எவருமே இப்பதவியைப் பொறுப்பேற்க முன்வரவில்லை. ஏன் என்பதை பொதுமக்கள் அறிவார்கள்?

இலங்கையின் எப்பகுதிக்கும் வைத்தியர்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருக்கிறது. மத்திய அரசின் உயர்நிலை அரச அதிகாரியாகிய என்னை, மாகாண அதிகாரிகள் கடமையைச் செய்ய விடாது மிகவும் வருந்தத்தக்க தவறான வழியில் தடுத்தார்கள்.

மத்திய அரசு, வைத்திய கலாநிதி உமாசங்கரை முல்லைத்தீவு மாவட்ட பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் வைத்திய கலாநிதி விநோதனை மன்னார் மாவட்ட பதில் சுகாதார சேவைகள்பணிப்பாளராகவும் நியமித்த போது எவரும் எதிர்க்கவில்லை, ஏன்? என்னை தடுத்ததன் மூலம்

யாழ்ப்பாணத்தில் சுகாதார சேவையில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது எனக்கு மிகுந்த மன உழைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சுகாதாரத் துறையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றது. இன்னொருவர் வரும் வரை இவற்றை நிவர்த்தி செய்யலாம் என்று இருந்தேன். மாகாண அமைச்சு சுகாதாரத் துறையில் தேவையற்ற தலையீடு செய்வது கவலை தருகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.