ஜெகன் மோகன் ரெட்டியின் தளபதியாக இருந்த ரோஜாவுக்கு அமைச்சரவையில் இடமில்லையா?

ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது இதில் 151 சட்டமன்ற தொகுதிகளில் ஜெகன் மோகனின் YSR காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. கடந்த முறை ஆட்சி செய்த சந்திரபாபு நாய்டுவின் தெலுங்கு தேசம் கட்சி 24 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில், கடந்த மாதம் 30 ஆம் தேதி ஆந்திரா முதல்வராக YSR காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக் கொண்டார். இதனையடுத்து, நேற்று அமைச்சரவை விரிவாக்கம் குறித்து YSR காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

நடை பெற்று முடிந்த கூட்டத்தில் 5 பேர் துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். துணை முதலமைச்சராக ஜெகன் மோகன் நியமித்த 5 நபர்களில், தாழ்த்தப்பட்டோர் ஒருவரும் , பழங்குடியினர் ஒருவரும், சிறுபான்மையினர் ஒருவரும், பிற்படுத்தப்பட்டோர் ஒருவரும் மற்றும் காப்பு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், 5 துணை முதலமைச்சர்கள், அமைச்சர்கள் 25 பேர் இன்று காலை பதவியேற்க உள்ளனர். துணை முதல்வர் அல்லது அமைச்சரவையில் ரோஜா இடம்பெறுவர் என எதிர்பாக்கப்பட்ட நிலையில் ஜெகன் மோகன் அறிவித்த பட்டியலில் நடிகை ரோஜாவின் பெயர் இல்லை. ஆனால், அவருக்கு சட்டசபை சபாநாயகர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளன.