இலங்கை தமிழரிடம் மனதை பறிகொடுத்த இளம்பெண்!

இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளம்பெண் ஜேர்மனியில் பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில் தனது வருங்கால கணவரை இலங்கையில் சந்தித்து அவரை தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தனது காதல் அனுபவங்கள் குறித்து அவரே கூறுகிறார், அது 2011-ஆம் ஆண்டு, உயர்நிலை பள்ளிப்படிப்பை அப்போது தான் ஜேர்மனியில் முடித்தேன்.

அப்போது என் குடும்பத்தார் விடுமுறைக்கு வெளிநாடு செல்ல திட்டமிட்டனர், கனடா அல்லது இலங்கைக்கு செல்ல திட்டமிட்டோம்.

முடிவில் இலங்கைக்கு செல்வது என முடிவெடுத்து அந்தாண்டு யூலையில் இலங்கைக்கு சென்றோம்.

சில நாட்கள் கொழும்பில் இருந்த நிலையில் பின்னர் யாழ்பாணத்துக்கு சென்றோம்.

அங்கு தான் அவரை முதன் முதல் பார்த்தேன், அவருடன் தான் நானும் என் குடும்பமும் அதிக நேரம் செலவிட்டோம்.

அவரின் குணம் மற்றும் நடத்தை என் குடும்பத்தினருக்கு ரொம்ப பிடித்துவிட்டது, அவரை திருமணம் செய்து கொள்கிறாயா என என்னிடம் திடீரென என் பெற்றோர் கேட்டார்கள்.

இதை கேட்டு எனக்கு சில நிமிடங்கள் பேச்சே வரவில்லை, பின்னர் அவரை திருமணம் செய்ய மாட்டேன் என கூறிவிட்டேன்.

பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து நாங்கள் ஜேர்மனிக்கு திரும்பினோம்.

2012 புத்தாண்டு பிறந்தது, இலங்கையில் நான் பார்த்த நபருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் மெசேஜ் அனுப்ப என் தாய் கோரினார்.

அதன்படி நான் மெசெஜ் அனுப்பிய நிலையில், அவர் பதிலுக்கு நன்றி என மெசேஜ் அனுப்பியதோடு எனக்கு பேஸ்புக் அல்லது இமெயில் முகவரி உள்ளதா என கேட்டார்.

இதையடுத்து என் பேஸ்புக் முகவரியை கொடுத்தேன், அங்கு தான் எல்லாமே தொடங்கியது.

தினமும் மணிக்கணக்கில் அவருடன் இணையம் மூலம் பேச தொடங்கினேன், சில மாதங்களிலே அவர் என்னை கவர்ந்து விட்டார், ஆம் அவரை நான் காதலிக்க தொடங்கினேன்.

இருவரும் ஒருவரிடம் ஒருவர் காதலை பரிமாறி கொண்டோம், பின்னர் செல்போன் மூலம் பேச தொடங்கினோம்.

அடுத்த 16 மாதங்கள் செல்போன் கையுமாக இருந்தேன், அப்போது என் மீது அவர் பொறாமை கொண்டது தெரியவந்தது.

அதாவது, நான் பல்கலைகழகத்தில் சக ஆண் மாணவருடன் சேர்ந்து உட்காருவதே, சேர்ந்து படிப்பதோ அவருக்கு பிடிக்கவில்லை.

இது ஜேர்மனி கலாச்சாரத்தில் சகஜம் என்றாலும் அதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்த நிலையில் 2013 ஆகஸ்ட் நானும் என் அம்மாவும் மீண்டும் இலங்கைக்கு சென்றோம்.

அங்கு அவருடன் நிறைய நேரம் செலவிட்டேன், அப்போது எங்களின் திருமண பேச்சு வந்தது.

திருமணத்துக்கு பிறகு என்னுடன் ஜேர்மனிக்கு வர அவர் சம்மதித்தார்.

இதையடுத்து அவரின் நண்பர்கள் உதவியுடன் எங்கள் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் நான் ஜேர்மனிக்கு திரும்பிய நிலையில் விசா விண்ணப்பிக்க அவர் இலங்கையிலேயே இருந்தார்.

அப்போது மீண்டும் பொறாமை அவருக்கு வந்தது, நான் குறிப்பிட்ட உடைகளை தான் அணிய வேண்டும், மாலை 6 மணிக்குள் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என என்னை அவர் வலியுறுத்தினார்.

இது எனக்கு மன அழுத்தத்தை கொடுத்த நிலையில் அவரை உடனடியாக ஜேர்மனிக்கு அழைத்து வர முடிவு செய்து இலங்கைக்கு மீண்டும் சென்றேன்.

ஜேர்மனிக்கு செல்ல ஏ1 ஜேர்மன் மொழி தெரிவில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிலையில் அவருக்கு அதை சொல்லி கொடுத்தேன்.

பின்னர் அவர் தேர்வில் தேர்ச்சி பெற்றார், இதையடுத்து நான் முதலில் ஜேர்மனி சென்று பிறகு இரண்டு மாதங்கள் கழித்து அவர் அங்கு வந்தார்.

ஜேர்மனியில் எல்லாமே என் கணவருக்கு புதிதாக இருந்தது, மொழி தெரியாமல் தடுமாறினார். எல்லா சூழலிலும் நான் அவருடன் இருக்கும்படி இருந்தது.

சலவையகம் மற்றும் துரித உணவகத்தில் அவர் வேலை செய்தார், ஓய்வில்லாமல் வேலை செய்ததால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டது.

என்னாலும் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. வாழ்க்கையில் மகிழ்ச்சியான மாற்றம் வராதா என ஏங்கினேன்.

பின்னர் வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று நல்ல வேலைக்காக இருவரும் கோரினோம், இதையடுத்து பெரிய நிறுவனத்தின் கிடங்கு பிரிவில் என் கணவருக்கு வேலை கிடைத்தது.

அந்த வேலை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது, நானும் என் படிப்பை முடித்துவிட்டு கணவரின் துறையிலேயே தற்போது பணிபுரிகிறேன்.

எங்கள் பிரச்சனை எல்லாம் சரியாகிவிட்டது, தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம்.

இதன் மூலம் நான் சொல்ல வருவது இதை தான், எல்லா கடினமான நிலைக்கு பின்னரும் ஒரு நல்ல விடயம் நிச்சயம் நடக்கும்.

என் பிரச்சனைகளின் போது என் கணவர் எனக்கு பெரிதும் துணை நின்றார். இது எங்களுக்குள் உள்ள காதல் மற்றும் உறவை மேலும் வலிமையாக்கியது.

என் வாழ்க்கையில் கிடைத்த மிக பெரிய ஆசிர்வாதமாக என் கணவரை கருதுகிறேன்!