திருமண ஆசை காட்டி முதியவரை ஏமாற்றிய இளம்பெண்!!

திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள மரூக்கலாம்குளம் என்ற கிராமத்தில் தங்கபாண்டியன் (60)என்ற விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது மனைவி இறந்து விட்டார். தங்கப்பாண்டியனுக்கு குழந்தைகள் எல்லாம் இல்லை. மனைவியின் இறப்பு அவரை மிகவும் வாட்டியது.

அவரும் வயல் வேலையில் கவனத்தை செலுத்தி தனது சோகத்தை மறைக்க முயன்றார். அவராகவே வீட்டில் சமைத்து சாப்பிட்டு விடுவார். இவ்வாறு, தனிமையில் வாழ்ந்து வந்த அவருக்கு திடீரென ஒரு சம்பவம் நடந்துள்ளது. நேற்று காலை எட்டு மணி அளவில் ஒரு அழகான 25 வயது மிக்க இளம்பெண் இவரது வீட்டிற்கு வந்து ஐயா வீட்டில் யார் இருக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

வெளியில் வந்து எட்டிப் பார்த்த தங்கபாண்டியன் ,அங்கு இந்தபெண்ணை பார்த்து, நீங்கள் யார் உங்களுக்கு என்ன வேண்டும் என பணிவுடன் விசாரித்துள்ளார். உடனடியாக அந்த பெண் ஓவென கதறி அழுது அய்யா உங்களை பார்த்தால் நல்ல மனுஷன் மாதிரி தெரிகிறது. எனக்கு அப்பா அம்மா யாரும் இல்லை. நான் ஒரு அனாதை நீங்கள் தனியாக வசித்து வருவதாக கூறினார்கள். எனக்கு ஏதாவது வேலை கொடுத்தால் உங்களுக்கு சமைத்து போட்டு கொண்டு உங்களை நல்லபடியாக பார்த்துக் கொள்வேன் என கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இதனை பார்த்ததும் மனம் உருகிய தங்கபாண்டியன் அந்தப் பெண்ணிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்டுள்ளார். அவரும் சம்மதிக்கவே அவரை உடனடியாக நகை கடைக்கு அழைத்துச் சென்று தாலி செயின், மோதிரம், பட்டுச்சேலை என பல ஆயிரம் பணத்தை செலவழித்து உள்ளார். ஆனால், இறுதியில் அந்த பெண் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு தங்கபாண்டியனை ஏமாற்றி விட்டு சென்று விட்டார். அவரது வாழ்வில் இது மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆறுதலாக பேசி இவ்வாறு துரோகம் செய்தது தங்கபாண்டியன் மனதை வெகுவாக பாதித்துள்ளது.