திடீரென டயர் வெடித்ததால் ஏற்பட்ட சோகம்!!

சிதம்பரத்தை சேர்ந்த மணிவண்ணன் மற்றும் அவரது நண்பரான சிவராஜ் ஆகிய இரண்டு இளைஞர்களும் வேலை சம்மந்தமாக நேற்று முன்தினம் சென்னைக்கு வந்துள்ளனர். அதனை முடித்துவிட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு சென்றனர்.

அவர்கள் இருவரும் வண்டலூர் அருகே வரும்போது திடீரென மோட்டார் சைக்கிளின் டயர் வெடித்தது. இதனால் மோட்டார் சைக்கிள் சாலை ஓரமாக இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சிவராஜ், மணிவண்ணன் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் சிவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து பலத்த காயமடைந்த மணிவண்ணனை அம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனையில் மணிவண்ணன் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

உயிரிழந்த சிவராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். வெயில் நேரத்தில் மோட்டார்சைக்கிளை நீண்ட தொலைவிற்கு இயக்கியதே இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என அப்பகுதியில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.