சாதியை சொல்லி கொலைவெறி தாக்குதல்!

கோவை கிணத்துக்கடவு பகுதியில் சாதியின் பெயரைச் சொல்லி கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை கிணத்துக்கடவு பகுதியில் ஆதிதிராவிடர் இனத்தைச் சார்ந்த காளிமுத்து என்பவரின் மகன் முருகேசன், தனது குடும்பத்தினருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றினை அளித்தனர்.

அந்த மனுவில், கடந்த 10ம் தேதி கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பறையர் தெருவில் உயர் ஜாதி வகுப்பினைச் சேர்ந்த 10 பேருக்கும் மேற்பட்ட நபர்கள், அப்பகுதியில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் கிரிக்கெட் விளையாடி உள்ளனர். அப்போது அவர்கள் வேண்டுமென்றே எங்களது குடியிருப்புகள் உள்ள அனைத்து வீடுகளின் ஓடுகளையும் பந்துகளால் அடித்து சேதப்படுத்தி உள்ளனர். இதனால் ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்த முக்கியமானவர்கள் சென்று அவர்களிடம் நீங்கள் இந்த பகுதியில் கிரிக்கெட் விளையாடுவதால் எங்களது வீடுகள் சேதம் அடைந்து வருகின்றது. அதனால், மைதானத்தில் சென்று விளையாடுங்கள் என கூறியுள்ளனர்.

ஆனால் அவர்கள் நீங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா இருந்தால் காட்டுங்கள் நாங்கள் இங்கு விளையாட மாட்டோம்  எனக் கூறியதோடு மட்டுமின்றி, அவர்களின் ஜாதிகளைப் பற்றி மிகவும் கீழ்த்தரமாக பேசி தாக்கியுள்ளனர். இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில், அவர்கள் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் ஓடுங்கடா ” பறை ஜாதி நாய்களே” என கூறியதோடு கிரிக்கெட் மட்டையால் அனைவரையும் தாக்கியுள்ளனர். இதில் மிகவும் காயமடைந்த முருகேசன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தலையில் அதே கட்டுடன் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார்.

இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சுசி கலையரசன்,
மாவட்ட துணை செயலாளர் கிணத்துக்கடவு சுப்பிரமணியம்,  மாவட்ட இணை செயலாளர் குறிச்சி முரளி, கிணத்துக்கடவு மைய மாவட்ட செயலாளர் தனலட்சுமி, மற்றும் கழக நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.