குழந்தையை காரிலே மறந்துவிட்டு வீடு திரும்பிய பெற்றோர்!

மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தையை அதன் பெற்றோர் வீடு திரும்பும்போது காரிலே மறந்துவிட்டு சென்றுள்ள சம்பவம் ஜேர்மனியில் நடைபெற்றுள்ளது.

ஜேர்மனியில் உள்ள ஹம்பர்க் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்களுக்கு புதிதாக பிறந்த குழந்தையை முதன்முறையாக மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு எடுத்துக்கொண்டு காரில் கிளம்பியுள்ளனர்.

வீட்டை அடைந்ததும், வாடகைக்காருக்கான பணத்தை செலுத்திவிட்டு, ஓட்டுனரிடம் இருந்து விடை பெற்றனர்.

உடனே அந்த ஓட்டுனரும் காருடன் அங்கிருந்து கிளம்பிவிட்டார். அப்பொழுது தான் அந்த குடும்பத்தினர், குழந்தை தங்களுடன் இல்லாமல் இருப்பதை கவனித்துள்ளனர்.

காரை நிறுத்த முயற்சித்தும், அது தோல்வியிலேயே முடிந்தது. உடனே குழந்தையின் பெற்றோர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில் காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு ஓட்டுனரும் மதிய உணவு சாப்பிட ஆரம்பித்துள்ளார். அந்த சமயத்தில் குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், எந்த சத்தமும் எழுப்பாமல் இருந்துள்ளது.

பின்னர் அங்கிருந்து விமான நிலையதிற்கு சென்ற அவர், ஒரு பயணியை காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளார். அந்த பயணி ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பதை பார்த்து எரிச்சலடைந்து ஓட்டுனரிடம் கூறியுள்ளார். அப்போது தான் குழந்தை காரில் இருப்பதை அந்த ஓட்டுநர் கவனித்துள்ளார். அதேசமயம் குழந்தையும் தூக்கத்திலிருந்து எழுந்து அழ ஆரம்பிவிட்டது.

உடனே அந்த ஓட்டுநர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் விரைந்த பொலிஸார் பரிசோதனைக்கு பின்னர் குழந்தையை அதன் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.