ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

புணாணையில் கிழக்கு மாகாண ஆளுநரினால் அமைக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்குள் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணையில் கிழக்கு மாகாண ஆளுநரினால் அமைக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தினை பார்வையிடுவதற்காக பாராளுமன்ற உயர் கல்வி அமைச்சின் குழுவினர் இன்று விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இப்பல்கலைக்கழகம் தொடர்பாக பாராளுமன்ற உயர் கல்வி அமைச்சின் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதி குறித்த பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவதற்கு இருந்தனர். ஆனால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலை காரணமாக பிற்போடப்பட்டிருந்தது.

இக் குழுவினர் இன்று பாராளுமன்ற உறுப்பினரும், உயர் கல்வி அமைச்சின் கோப் குழு தலைவருமான பேராசிரியர் ஆசு மாரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோகினி விஜயரெட்ண, எஸ்.வியாளேந்திரன், உயர் கல்வி அமைச்சின் செயலாளர் சஜிவி கமகே, மகாவலி பிராந்திய முகாமையாளர் எஸ்.திசார ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், அங்கு வருகை தந்திருந்த திம்புலாகல ராகுல அலங்கார தேரரின் தலையீட்டினால் செய்தியாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பல்கலைக்கழகம் தொடர்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், பல்கலைக்கழகம் தொடர்பான ஆவணங்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன், பல்கலைக்கழக வளாகம் மற்றும் சகல நிர்வாகப் பிரிவுகளையும் பார்வையிடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.