பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!

பாகிஸ்தானில் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டு தற்போது கனடாவில் குடியேறியிருக்கும் ஆசியா பீவியை, கொலை செய்யப்போவதாக மர்ம நபர் பேசும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த ஆசியா பீவி கடந்த 2010ம் ஆண்டு பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது முகமது நபிகள் பற்றி ஆசியா பீவி தவறாக பேசியதாக, அந்த பெண் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் பற்றி ஆசியா பீவிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 8 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர், ஆசியா பீவி மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஆனால் அவருடைய குடும்பத்தாருக்கு பாகிஸ்தானில் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்த காரணத்தால், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்களுக்கு உதவ முன்வந்தார்.

ஜஸ்டின் ட்ரூடோ கடந்த வாரம் அவரை கனடாவிற்கு வரவேற்றார். மேலும் அவரது மகள்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்.

இந்த நிலையில் முகம் காட்டாத மர்ம நபர் ஒருவர், ஆசியா பீவி இனிமேல் இழிவான வார்த்தைகளை பேசவிடாமல் தடுப்பதற்காக, அவருக்கு மரண தண்டனை கொடுக்க கனடா வந்திருக்கிறேன் என பேசும் வீடியோ காட்சி ஒன்றினை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. மிரட்டல் விடுத்த நபர் எதுவும் பயங்கரவாத குழுவை சேர்ந்தவரா என்பது குறித்து அதிகாரிகள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. இந்த வீடியோவினால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.