‘நான் அவன் இல்லை’ திரைப்பட பாணியில் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய இளைஞர்!

இணையத்தின் மூலம் பல பெண்களை ஏமாற்றி பணத்தை சுருட்டிய இளைஞரை ஆந்திர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான ‘நான் அவன் இல்லை’ படத்தில் வரும் காதநாயன், இளம்பெண்கள் பலரையும் ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பணத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிடுவான்.

அந்த படைத்தை போல நிஜ சம்பவம் ஒன்று தற்போது அரங்கேறியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விசாகப்பட்டினம் பொலிஸாரிடம் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அதில், ஜவகர் சுக்ரா (32) என்கிற ஜவகர் பாலகுமாரை நான் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேட்ரிமோனியல் இணையதளத்தில் சந்தித்து காதலித்தேன்.

மேலும், திருமணம் செய்துகொள்வதாக கூறி ஆசை வார்த்தை காட்டியதோடு, தொழில் துவங்குவதற்கு பணம் தேவைப்படுவதாக என்னிடம் இருந்து ரூ. 18 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு தப்பியதாக குறிப்பிட்டிருந்தார்.

இதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் ஜவகரை தொடர்பு கொண்டபோது தொழில் நிமித்தமாக சிங்கப்பூரில் இருக்கிறேன் என கூறியுள்ளார். ஆனால் அவருடைய செல்போன் சிக்னல் தேனி மாவட்டம் கம்பம் பகுதியை காட்டியுள்ளது.

உடனே விரைந்து சென்ற பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, பல பெண்களை இதுபோல் திருமணம் செய்து ஏமாற்றியிருப்பது தெரியவந்தது.

சென்னையை சேர்ந்த மம்தா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற இளம்பெண் மாப்பிள்ளை வேண்டி 2015ம் ஆண்டு மேட்ரிமோனியல் இணையதளத்தில் பதிவு செய்திருந்தார்.

அதில் அறிமுகமான ஜவகர் பாலகுமாரின் பேச்சில் மயங்கிய மம்தா தன்னுடைய பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துள்ளார்.

பின்னர் இருவரும் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அங்கு கர்ப்பமடைந்த நிலையில் மம்தாவை தவிக்கவிட்டு, பெங்களூரு செல்வதாக கூறி, அவரிடம் இருந்து ரூ. 6.5 லட்சம் பணமும், ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் பெற்றுக்கொண்டு ஜவகர் மாயமாகியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மம்தா 2017ம் ஆண்டே பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்துள்ளார்.

இதேபோல 2016ம் ஆண்டு ஆந்திர மாநில மேட்ரிமோனியல் இணையதளத்தில், பார்வதி என்கிற பெண்ணை சந்தித்துள்ளார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்தின் போது ரூ. 10 லட்சம் பணமும், 20 சவரன் நகையும் வரதட்சணையாக பெற்றதோடு மட்டுமில்லாமல், அதன்பிறகும் தொடர்ந்து வரதட்சணை கேட்டு ஜவகர் பாலகுமாரன் குடும்பத்தார் கொடுமைபடுத்த ஆரம்பித்துள்ளனர்.

மம்தாவிடம் கூறியதை போலவே பார்வதியிடமும் பொய் கூறி ஹோட்டலில் தவிக்கவிட்டு தப்பியுள்ளார். அடுத்து பெங்களூரை சேர்ந்த ஸ்வாதி, அனு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.