தவறாக விலையுயர்ந்த ஒயினை பரிமாறிய விடுதி ஊழியர்: நிர்வாகத்தின் ரெஸ்பான்ஸ்!

இங்கிலாந்திலுள்ள பிரபல மதுபான விடுதி ஒன்றிற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு தவறுதலாக விலையுயர்ந்த ஒயினை பரிமாறிவிட்டார் விடுதி ஊழியர் ஒருவர். அந்த ஒயினின் விலை பாட்டில் ஒன்றிற்கு 4,500 பவுண்டுகளாகும்.

மான்செஸ்டரிலுள்ள அந்த விடுதியில் அந்த விடுதி ஊழியர் தான் பரிமாறுவது பழமையான விலையுயர்ந்த ஒயின் என்று தெரியாமலேயே அந்த ஒயினை பரிமாறி விட்டார்.

அந்த வாடிக்கையாளர் சென்றபிறகுதான் விடுதியிலுள்ளவர்களுக்கு நடந்த தவறு தெரிந்திருக்கிறது.

பொதுவாக இம்மாதிரி தவறு செய்த ஊழியர்கள் ஏதாவது ஒரு வகையில் தண்டிக்கப்படுவார்கள்.

ஆனால் இந்த விடுதியினர் ஒரு வித்தியாசமான செயலை செய்தார்கள். விடுதி சார்பில் ட்விட்டரில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில், நேற்றிரவு 4,500 பவுண்டுகள் விலையுடைய ஒயின் பரிமாறப்பட்ட வாடிக்கையாளருக்கு, நீங்கள் உங்கள் மாலைப்பொழுதை இனிதே செலவிட்டீர்கள் என்று நம்புகிறோம் என்று கூறப்பட்டிருந்தது.

அதேபோல் அந்த தவறை செய்த ஊழியருக்காக ட்வீட் செய்திருந்த செய்தியில், தவறாக அந்த விலையுயர்ந்த ஒயினை பரிமாறிய ஊழியரே, பரவாயில்லை, கவலைப்படாதீர்கள், தவறுகள் நிகழ்வது சகஜம்தான், இருந்தாலும் உங்களை நேசிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த ட்வீட்டின் கீழ், அந்த விலையுயர்ந்த ஒயினை பருகியதாக கருதப்படும் ஸ்டீவ் என்பவர், அந்த ஒயின் எவ்வளவு விலையுடையது என்பது தனக்கு தெரியாது என்றும் ஆனால் அது மிகவும் சுவையாக இருந்தது என்றும் தெரிவித்திருந்தார்.