ஜமீன் குடும்பத்தின் மரகதலிங்கம்… 2 ஆண்டுகள் கழித்து குப்பையில் கண்டுபிடிப்பு…

தமிழ்நாட்டில் ஜமீன் குடும்பத்துக்கு சொந்தமான பச்சை மரகதலிங்கம் காணாமல் போன நிலையில் தற்போது குப்பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் ஜமீன் பரம்பரையினர் வசித்து வருகின்றனர். அவர்கள் வீட்டின் அருகே உள்ள மலை மீதுதான் மனோன்மணி அம்மன் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலை ஜமீனைச் சேர்ந்த மகேந்திர பண்டாரிங்கறவர் தான் நிர்வகித்து வருகிறார். இந்தக் கோயில், 800 ஆண்டுகள் பழைமையானது. இதன் சிறப்பே மரகதலிங்கம் தான்.

இந்த மரகதலிங்கத்தின் விலை பல கோடிகள் இருக்கும் என கூறப்படும் நிலையில் 2017 ஜனவரி 8-ம் திகதி அன்று அது காணாமல் போனது.

கோயிலில் மரகதலிங்கம் இருப்பது தெரிந்த கொள்ளையர்கள் அதை திருடிச் சென்றனர். இது தொடர்பாக ஜமீன்தார் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வந்தார்கள்.

இந்நிலையில், ஜமீன் தோட்டத்தில் வேலை செய்யும் பச்சையப்பன் என்பவர், ஜமீன் பங்களாவைச் சுத்தம் செய்துவிட்டு குப்பையை கொட்டுவதற்காகப் பங்களா பின்புறம் இருக்கும் குப்பை மேட்டுக்குச் சென்று குப்பையைக் கொட்டும்போது, பச்சை நிறத்தில் எதோ மின்னுவது போன்று தெரிந்துள்ளது.

அதை எடுத்துப் பார்த்தபோது அது காணாமல் போன மரகதலிங்கம் என்று தெரிந்துள்ளது. உடனே அவர் ஜமீனுக்குத் தகவல் கொடுத்ததும், அவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து மரகதலிங்கத்தை திருடியது யார் மற்றும் அவர்கள் ஏன் லிங்கத்தை இங்கேயே போட்டுச் சென்றார்கள் எனப் பல கோணங்களில் பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.