வெளிநாட்டு வேலையை விட்டு ஊருக்கு வந்த கணவன்.. கதறல்….

கேரளாவில் கடன் வாங்கிய வங்கியில் இருந்து தொடர்ந்து மிரட்டல் வந்ததால் மானம் போய்விட்டதாக கருதி தாயும், மகளும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் மனைவி லேகா (42). தம்பதிக்கு வைஷ்ணவி (19) என்ற மகள் உள்ள நிலையில் அவர் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

வளைகுடா நாட்டில் பணிபுரிந்து வந்த சந்திரன் வீடு கட்டுவதற்காக கனரா வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கினார்.

இந்நிலையில் உடல்நிலை பிரச்சனை காரணமாக வெளிநாட்டு வேலையை ராஜினாமா செய்த சந்திரன் உள்ளூருக்கு வந்து கிடைத்த வேலையை செய்து வந்தார்.

தான் கட்டி வந்த வீட்டுக்கு ரூ.8 லட்சம் செலுத்தியுள்ள நிலையில், மேலும் ரூ.6.80 லட்சம் செலுத்த வேண்டுமென்று வங்கி அதிகாரிகள் சந்திரனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இதனால் கட்டி வந்த வீட்டையும் அதைச் சுற்றி நிலத்தையும் விற்க ரூ. 24 லட்சத்துக்குப் சந்திரன் பேரம் பேசியுள்ளார்.

மேலும் மே 14-ம் தேதி கடனை அடைத்து விடுவதாகச் சந்திரனின் மனைவி லேகா வங்கி அதிகாரிகளுக்கு உறுதி அளித்துள்ளார்.

ஆனால், நிலத்தை நினைத்தது போல விற்க முடியவில்லை. இதனால், வங்கி அதிகாரிகள், லேகாவுக்கு தொடர்ச்சியாகப் போன் செய்து, சொத்துகளைப் பறிமுதல் செய்யப் போவதாக மிரட்டியுள்ளனர்.

இதனால், பயந்து போன லேகா மானம் மரியாதை போய் விட்டதாகக் கருதினார். இதையடுத்து லேகா மகள் வைஷ்ணவியுடன் தீக்குளித்தார். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் இருவரும் உயிரிழந்தனர்

வங்கி அதிகாரிகளின் கெடுபிடியால் தாய், மகள் தற்கொலை செய்ததை அடுத்து குறித்த வங்கி முன்னர் மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சந்திரன் கூறுகையில், எங்கள் நிலத்தையும் வீட்டையும் கைப்பற்ற வங்கி அதிகாரிகள் முயன்றார்கள்.

எங்கள் நிலத்தை வாங்க ஒப்புக்கொண்டவர்கள், கடைசி நேரத்தில் முடிவை மாற்றியதால் எங்களால் கடன் பணத்தை தர முடியவில்லை.

தற்போது என் மனைவி மகளை இழந்து தவிக்கிறேன் என கதறியபடி கூறியுள்ளார்.