சிறுவனின் பசியாற்றிய இராணுவ வீரர்..

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பக்கவாதத்தால் பாதித்த சிறுவனுக்கு பசியாற்றிய ராணுவ வீரரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

காஷ்மீர் மாநிலத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் பசியால் தவித்தபோது மத்திய துணை ராணுவப்படை வீரர் உணவூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த செயலுக்கு அந்த ராணுவ வீரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் சென்ற வாகன வரிசையின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த வீரர்களில் ஒருவரான இக்பால் சிங் என்பவர் ஸ்ரீநகரில் உள்ள நவகடால் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனது வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை பிற்பகல் வேளையில் சாப்பிட தொடங்கினார். அப்போது அங்கு அமர்ந்திருந்த சிறுவன் தனக்கும் பசிக்கிறது என்று சைகை காட்டி தெரிவித்துள்ளார்.

உடனே அந்த ஜவான் தனது டிபன் பாக்ஸை அந்த சிறுவனிடம் நீட்டியபோது அதை வாங்கி சாப்பிட முடியாதவாறு தவித்தான். உடனே இக்பால் சிங், தனது கையால் அவனுக்கு உணவூட்டி, தண்ணீர் குடிக்க வைத்து, வாயை கழுவிவிடும் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.