உலக வல்லரசுகளின் போராட்ட களமாக மாறியுள்ள இலங்கை – அமெரிக்க இராணுவ செய்தி நிறுவனம்

ராஜபக்ச அரசாங்கம் கடந்த 2007 ஆம் ஆண்டு உடன்படிக்கை ஒன்றின் மூலம் இலங்கையின் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களுக்கு பிரவேசிக்கும் அனுமதியை அமெரிக்க இராணுவத்திற்கு வழங்கியதாக அந்நாட்டு இராணுவ செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்திய -பசுபிக் பிராந்திய கடற்படை தளபதி அத்மிரல் பிலிப் டேவிட்சன் இந்த தகவலை வழங்கியுள்ளார். இந்த மாத ஆரம்பத்தில் அமெரிக்க செனட் சபையின் இராணுவ சேவை சம்பந்தமான குழுவிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமுத்திரத்தின் பூகோளவியல் அரசியல் சார்ந்த மண்னை அடிப்படையாக கொண்ட போரில் இலங்கை சிக்கியுள்ளதாகவும் சீனாவுக்கு எதிரான யுத்தம் உக்கிரமடைந்துள்ளதால், இலங்கைக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கி வருவதுடன் கடற்படை 48 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது.

திருப்பி செலுத்த முடியாத அளவில் சீனாவிடம் கடனை பெற்ற மகிந்த ராஜபக்ச அரசாங்கமே இலங்கையை சீனாவின் பலிகடாவாக மாற்றியதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

கடந்த ஒக்டோபர் மாதம் அரசியலமைப்புக்கு விரோதமாக நியமிக்கப்பட்ட அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்ச, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளுக்கு தேவையான வகையில் செயற்பட இணங்கி, இந்நாடுகளின் ஆதரவை கோரியதாகவும் எனினும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் இராணுவ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

சீனாவுக்கு எந்த வரையறையும் இல்லாமல் இலங்கையில் கால் பதிக்க இடமளித்ததன் பிரதிபலனாக உலக வல்லரசுகளின் அதிகார போராட்ட களமாக இலங்கை மாறியுள்ளதாகவும் இராணுவ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.