இந்திய இளம்பெண் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்….!

இந்திய இளம்பெண் ஒருவர் கனடாவில் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீண்ட நாட்களாக குற்றவாளியை பொலிசார் தேடி வந்த நிலையில், அவரது காதலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் சர்ரே பகுதியில் வசிக்கும் பஞ்சாபைச் சேர்ந்த பவ்கிரண் தேசி என்னும் கிரண் தேசி (19) கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1 ஆம் திகதி வெளியே சென்று வருவதாக தனது பெற்றோரிடம் கூறி விட்டு சென்றிருக்கிறார். அதற்குப்பின் அவர் வீடு திரும்பவில்லை.

பின்னர் எரிந்த நிலையில் இருந்த அவரது காருக்குள் உயிரற்ற நிலையில் தேசியின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது.

அவரது உடலில் இருந்த காயங்களின் அடிப்படையில் தேசி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு பொலிசார் வந்தனர்.

குற்றவாளியை நீண்ட நாட்களாக பொலிசார் தேடி வந்த நிலையில், தேசியின் காதலரான ஹர்ஜோத் சிங் டியோ (21) என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய ஆதாரம் ஒன்று சிக்கியதையடுத்து டியோவை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், அதை தற்போது வெளியிட இயலாது என்றும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மேலும் சிலருக்கும் கொலை தொடர்பான முக்கிய தகவல்கள் தெரியும் என்றும் தாங்கள் நம்புவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வான்கூவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட டியோ காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 27ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.