கடைசி ஓவரை மலிங்காவுக்கு கொடுத்தது ஏன்? ரோஹித் ஷர்மா விளக்கம்

சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல் இறுதிப் போட்டியில், கடைசி ஓவரை வீச மலிங்காவை அழைத்தது குறித்து மும்பை அணித்தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.

நேற்றைய தினம் நடந்த பரபரப்பான ஐ.பி.எல் இறுதிப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா கடைசி ஓவரை சிறப்பாக வீசி மும்பையின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

முன்னதாக கடைசி ஓவரை வீசுவது யார் என்ற கேள்வி எழுந்தது. வெற்றியை முடிவு செய்யும் ஓவர் என்பதால் சிறப்பாக பந்துவீசி வந்த பாண்ட்யாவைத்தான் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா அழைப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

மலிங்கா அதிக ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்ததால் அவரை ரோஹித் அழைக்கமாட்டார் என்றும் கருத்து நிலவியது. ஆனால், ரோஹித் ஷர்மா கடைசி ஓவரை வீச மலிங்காவை அழைத்தது அனைவரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ரோஹித்தின் முடிவு மிக சரியானது என மலிங்கா நிரூபித்தார். சிறப்பாக பந்துவீசி வெற்றியை தேடித்தந்தார். இந்நிலையில் போட்டி முடிந்ததும் வெற்றி குறித்து பேசிய ரோஹித் ஷர்மா கூறுகையில்,

‘இந்தத் தொடர் முழுவதும் நாங்கள் ஒரு நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம். அதன் காரணமாகத்தான் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலும் வந்தோம். இந்தத் தொடரை முதலில் இரண்டாக பிரித்துக்கொண்டோம். எங்கள் அணியின் 25 வீரர்கள் உள்ளனர்.

அனைவரும் வெவ்வேறு போட்டிகளில் தங்களின் பங்களிப்பை சரியாகச் செய்தனர். எங்களுக்கு உதவும் பணியாளர்களின் பங்கும் இந்த வெற்றியில் உள்ளது. எங்கள் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பல்வேறு கட்டங்களில் போட்டியை அவர்கள் மீட்டுத் தந்துள்ளனர்.

மலிங்கா ஒரு சாம்பியன். அதில் சந்தேகமே இல்லை. இதை அவர் பல ஆண்டுகளாக செய்து வருகிறார். கடைசி ஓவரில் பாண்ட்யாவை பந்துவீச அழைக்கலாம் என நினைத்தேன். ஆனால், இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் ஏற்கனவே பல முறை ஆடிய ஒரு வீரரைத்தான் பந்துவீச அழைப்பது சரியாக இருக்கும்.

மலிங்கா அதைப் பல முறை சரியாகச் செய்திருக்கிறார். நான் அனைத்துப் போட்டியிலும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு முறை களத்தில் நான் இறங்கும்போது நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்கிறேன். எங்களின் அணிக்குத்தான் அனைத்துப் பாராட்டுக்களும் பொருந்தும்’ என தெரிவித்துள்ளார்.